எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மார்கழிப்பூக்கள் மலர் 9 மாணிக்கத் தேரில் மரகதப் பொக்கிஷ...

 மார்கழிப்பூக்கள் 


 மலர் 9  மார்கழிப்பூக்கள்  மலர் 9 மாணிக்கத்

மாணிக்கத் தேரில் மரகதப் பொக்கிஷ வாசகம் என்னும் தேன் 


 
"திருவாசகம் வேறு, சிவன் வேறு", என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு, பூசையில் வைத்து வணங்கப்படும் பெருமையினையுடையது.  திருவாசகப் பாடல்கள்,   உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். வாரியார் ஸ்வாமிகள் மணிவாசகரின் புலமையை வியந்து கூறுமிடத்து, “வண்டு பல்வேறு பூக்களிடத்தும் சென்று தேனை எடுப்பது போல வாதவூரராகிய வண்டு வேத உபநிடதங்களிலிருந்து திருவாசகமாகிய தேனை எடுத்து நமக்கு வழங்கியுள்ளார்”, என்று கற்கண்டு போல் இனிமையாக கூறுவார். 

அதே போல், எத்தனையோ இலக்கியங்கள் இருந்தும் ஜி.யு.போப் அவர்கள், திருவாசகத்திற்கும் திருக்குறளிற்கும் முதலிடம்  தந்து மொழி பெயர்த்தமைக்கு என்ன காரணம்? என வினவலாம். . இளையராஜா அவர்களும் எத்தனையோ இசைத்தமிழ் நூல்கள் இருக்க இந்தத் திருவாசகத்திற்கு சிம்பொனி இன்னிசை ஏற்றி பெருமைப்படுத்தியது ஏன் என வினவலாம்.  இவ்விலக்கியங்கள்  தன்னுள்ளே கொண்டிருக்கும் வலிமையே முக்கிய காரணம்.      

மார்கழி மாதமானாலே  பார்ப்போரும் கேட்போரும் முழுமையாக அனுபவிக்கும் வண்ணம்,  தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்கள் திருப்பாவை, மற்றும் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி  பாசுரங்கள், விளக்கங்கள் என்று  பக்தி மணத்தை ஆன்மிக மழை எனப்  பொழிந்து வருகின்றன.  கடந்த நூற்றாண்டில் இலக்கிய, கலாச்சார வட்டங்களில் மிகவும் பேசப்பட்ட பேராசிரியர் திரு ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள்.  இவர் பல ஆண்டுகள் மார்கழி மாதம் முப்பது நாளும்  திருப்பாவை, திருவெம்பாவை விளக்கங்கள் கொடுக்கும் திருப்பணியை பக்தி சிரத்தையுடன் மேற்கொண்டிருந்தார். அவை அன்றைய வானொலியில் தொடர்ந்து  ஒலிபரப்பப்பட்டன. அவருக்கிருந்த ஒரு அலாதியான வெண்கலக்குரல் அவரது சொற்பொழிவுகளுக்கு மெருகூட்டியது. தமிழில் வானொலி நாடகங்களுக்கு வித்திட்டவர்களில் பேராசிரியர் முக்கியமானவர்.  

மாணிக்கவாசகருக்கென்று திருக்கோவில் ஒன்று தேனி அருகே உள்ளது. ஆம். தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூரில் தென்திசை நோக்கி குருவடிவாய் நிற்கும் நிலையில் விளங்கும் மாணிக்கவாசகரை மூலவராகக் கொண்டு ஒரு கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும், மக நக்ஷத்ர தினத்தன்று இவருக்கு   சிறப்பு வழிபாடு உண்டு. திருப்பெருந்துறை யோகாம்பாள் சமேத ஆத்மநாதசுவாமி திருக்கோவில், மணிவாசகரால் கட்டப்பட்டது.  ஆனி மாதம் மக நக்ஷத்ர தினத்தன்று,  கருவறையுள் மாணிக்கவாசகர் எழுந்தருளி இறைவனுடன் கலக்கும் காட்சி இடம்பெறும் நிகழ்வை நாம் காணலாம்.  அவிநாசி சிவாலயத்தில், கலை எழில் ததும்பும் மாணிக்கவாசகரின் செப்பு திருமேனி அழகு, மற்றும், பீடத்தில் பொறிக்கப்பட்ட நாகர எழுத்துக்களைக் கண்ணுறுங்கால், மிகப் பழைய காலத்திலேயே மாணிக்கவாசகரின் சிறப்பு தமிழகத்திற்கு அப்பாலும் பரவி,  போற்றப்படுவதாயிருந்தது என்பதை உணரலாம்.     

மார்கழித் திருவாதிரைக்கு முந்தைய பத்து நாட்களாகிய திருவெம்பாவைக் காலத்தில் இன்றைக்கும் இலங்கையில் சிவாலயங்கள் தோறும் சுவாமியையும் மாணிக்கவாசகப் பெருமானின் திருவுருவத்தையும் எழுந்தருளச் செய்த பின் அத்திருவுருவங்களின் முன் திருவாதவூரடிகள் புராணம் ஓதும் வழக்கங்கள் உள்ளன. இவ்விழாக்காலத்தில் இப்புராணம் முழுமையாகப் படிக்கப்பெறும். 

கூடுதல் புள்ளியாக,  இத்திருவாதிரைக்கொண்டாட்ட காலத்தில், நிறைவு நிகழ்வாக,  இலங்கைச் சிவாலயங்களில் நடைபெறும் தீர்த்தவாரியில் இறைவனின் பிரதிநிதியான “சிவாஸ்திர தேவருக்கு” பதிலாக அத்தேவருக்குச் செய்யப்பெறும் உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும் உண்டு. இது வேறு எந்த நாயன்மார்களுக்கும் செய்யப்பெறாத உபசாரமாகும்.  திருமுறைக்குத் தொண்டாற்றும் வண்ணம், திருவாசக தேன் தகுந்த உரையுடன் கணினி வடிவத்தில் பல வழிபாட்டு மையங்களால்  கொணரப்பட்டுள்ளன. 

மீண்டும் ஆன்றோர் வாக்கை நினைவு கூர்கிறேன்: "திருவாசகத்துக்கு  உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" . நீலகண்டனை நினைந்து,  நெக்குருகி, பாடி, பணிந்து, பரவசம் மிகவாகி, அவன் அருள் பெற்று உய்ய  நாம் தயாராவோம்.     

பதிவு : KADAYANALLURAN
நாள் : 24-Dec-17, 9:20 pm

மேலே