அனுபவத்தின் குரல் - 58 ********************************* சமுதாயத்தில் ஒருவரின்...
அனுபவத்தின் குரல் - 58
*********************************
சமுதாயத்தில் ஒருவரின் வாழ்க்கையின் பலதரப்பட்ட எண்ணங்களை ,அதன் அடிப்படையில் மேற்கொள்ளும் செயல்களை பற்றி கூறும்போது அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகள் வெற்றி , தோல்விதான் . நிச்சயம் எந்த தனி ஒருமனிதரும் தனது முயற்சியில் , கொள்கையில் , எண்ணத்தில் மற்றும் செய்கையில் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் அடைய முடியும் . அதுதான் இயற்கையின் நியதி . முடிவில் தெரியும் முடிவும் கூட . அது வெற்றியாகவும் இருக்கலாம் அல்லது தோல்வியாகவும் இருக்கலாம் .பொதுவாக ஒருவர் ஒரு காரியத்தில் வெற்றியடைந்தால் மகிழ்ச்சியும் , தோல்வி அடைந்தால் வருத்தமும் கொள்வது என்பது இயற்கை .உலகில் உள்ள அனைவருக்கும் ஏற்படுகின்ற உணர்வின் வெளிப்பாடு அது . இன்னும் சொல்ல போனால் மனித பிறப்பில் , குழந்தை பிறந்ததும் கொண்டாடுவதும் அதுவே ஒருவர் இறந்தவுடன் துக்கத்தால் அழுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான் .
இந்த விஷயத்தை அலசி பார்க்கும்போது மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் . ஒருவர் தனது செயலில் வெற்றி அடைந்தவுடன் அவரை பற்றி அதிகம் பேசுவதும் அளவுக்கு மீறி வார்த்தைகளை கோர்த்து வாழ்த்துவதும் , அதுமட்டுமன்றி அவரை பற்றியே பலநாட்கள் பேசிக்கொண்டு இருப்பதும் வாடிக்கை . அதேபோல தோல்வி அடைந்தவரை பற்றி தரம் குறைவாக பேசுவதும் , ஏதோ அவர்தான் உங்கள் முதல் எதிரியாக நினைத்துக்கொண்டு அதுவரை அவரைப்பற்றி பேசாமல் இருந்தவர்கள் கூட அவரின் தோல்வியை வைத்து எதிர்மறை கருத்துக்களையும் கூறி , மற்றொரு முயற்சியாக மறுபடியும் ஊக்கப்படுத்தி மீண்டும் செய்திட தூண்டாமல் மட்டம் தட்டி பேசுவதும் இங்கே வாடிக்கை . அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது . அது மிகவும் தவறான ஒன்று . வெற்றிப் பெற்றவர்களை தட்டிக் கொடுக்கவேண்டும் . தோல்வியை தழுவியவர்களை கேவலமாக நினைத்து குறை கூறாது மேலும் அப்பணியை தொடர ஊக்குவிக்க வேண்டும்.
வெற்றி தோல்வி என்றும் நிரந்தரமல்ல , நிச்சயமும் அல்ல .இதை அனைவரும் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல் மிக மிக அவசியம் .
வெற்றி எனில் உற்சாகத்தில் துள்ளலும் கூடாது , தோல்வி என்பதால் சோகத்தால் உடைந்திடவும் கூடாது . அதுமட்டுமின்றி வெற்றி பெற்றால் அவர்தான் உயர்ந்தவர் என்றும் தோல்வி அடைந்தால் அவர் தாழ்ந்தவர் என்று உதாசீனப்படுத்துதலும் கூடாது .
பழனி குமார்