அனுபவத்தின் குரல் - 61 --------------------------------------- மண்ணில் வாழும்...
அனுபவத்தின் குரல் - 61
---------------------------------------
மண்ணில் வாழும் நமக்குத்தான் விண்ணளவு விருப்பங்கள், கவின்மிகு கற்பனைகள் , வியத்தகு கனவுகள் உள்ளத்தில் உருவாகின்றன . அத்தனையும் நடந்தேறுமா நினைப்பவை நிறைவேறுமா என்றால் நிச்சயம் முடியாது என்பது நாம் அறிந்ததே . இருந்தாலும் அட்சய பாத்திரம் போல உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இவையாவும் தடையின்றி உருவாகி , நம்மை எப்பொழுதும் ஒரு கற்பனை உலகிலேயே மிதக்க வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை . இது இயற்கைதான் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .இதை சிலர் விதி என்றும் வேறு சிலர் தலை எழுத்து என்றும் கூறுகின்றனர் அவரவர் மனதில் தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில்.
அப்படி கூறுகின்ற அனைவரும் அதற்காக நடப்பது நடக்கட்டும் என்று அமைதி காக்காமல் , நம்பிக்கை என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை முதலாக வைத்து , அறிவை அடமானம் வைத்து , சுயசிந்தனை இழந்து இயற்கைக்கு எதிராக செயல்படுவதையும் காண்கிறோம் . இதன் மூலம் அவர்கள் வெற்றி அடைகிறார்கள் என்றால் அதுவும் இல்லை. பலருக்கும் தோல்வியே பரிசாக கிடைக்கிறது . உடனே அதற்கு அவர்களே , உலகிற்கு பயந்து , கேலிக்கு ஆளாகாமல் இருந்திட அவ்வளவும் நம் கையில் இல்லை என்று நாமாவளி பாடுகிறார்கள் . பரிதாபமாக உள்ளது அவர்கள் நிலை.
எதையும் பகுத்தறிந்து , நம் எண்ணத்திலும் செயலிலும் , உழைப்பையும் உண்மையையும் முதலீடு செய்து உள்ளத்தில் தூய்மையுடன் , தன்னம்பிக்கையுடன் தளராத நெஞ்சமுடன் , உள்ளக் கட்டுப்பாட்டுடன் கடமையை செய்து வந்தால் நிச்சயம் அதன் பலனை அனுபவிக்கலாம். நமது குறிக்கோளும் நிறைவேறும் . இலக்கை அடையலாம் இன்பமும் பெற்றிடலாம் . இதுதான் நடைமுறை வழக்கு . வாழ்வியலின் உண்மை தத்துவம் .உணர்ந்து வாழ்வோம் உவகை கொள்வோம் . உண்மையை அறிவோம் உயர்ந்த நிலை அடைவோம் .
புத்தாண்டு என்பது நாட்காட்டியில் ( காலண்டரில் ) தேதியும் வருடமும் கிழமையும் மாறுவது மட்டுமே .மனதில் மாற்றம் வந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம் .
எதையும் எதிர்கொள்ளும் துணிவும் ஆளுமையும் நமக்குள் பிறந்தால் நானிலத்தில் உற்சாகமாக வாழலாம் .
பழனி குமார்
31.12.2017
31.12.2017