அனுபவத்தின் குரல் 70 ------------------------------------- நமது சமுதாயத்தில் பொதுவாக...
அனுபவத்தின் குரல் 70
-------------------------------------
நமது சமுதாயத்தில் பொதுவாக ஒரு மனநிலை , நிலவுகிறது தொன்றுத் தொட்டு . அதாவது உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என்று ஒரு மனப்பான்மை தான் அது . சிலர் பொருளாதார அடிப்படையில், சற்று தாழ்ந்து இருப்பின் தம்மை " தாழ்ந்தவர் " என்றும் , வசதி படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் " உயர்ந்தவர்கள் " என்றும் கூறிக் கொள்வதும் வழக்கமாகி விட்டது . இதை நான் குறிப்பிடுவது சாதி மதங்களை, மொழி இனங்களைக் கடந்து அனைவர் மத்தியிலும் உள்ளத்தில் உலா வருகின்ற ஒன்றுதான் . பிறப்பால் நாம் மனிதரே ... பிறக்கின்ற வழியும் ஒன்றே . ஆகவே இந்த பூமியில் மனித இனம் என்பது ஒன்றேதான் . அதில் வேறுபாடு காணுதல் என்பதே தவறானது . அவரவர் சார்ந்துள்ள குடும்ப சூழ்நிலையில் மாறுபாடுகள் இருப்பது பொதுவான ஒன்றுதான் . அதற்கு நாம் பொறுப்பல்ல. அதற்காக வீதியில் வசிப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் உயர்ந்தவர்கள் என்று பிரித்துப் பார்ப்பது குற்றமாகும் .அந்த நிலையே ஒரு செயற்கை மாற்றம்தான் . இல்லாதவனிடம் செல்வம் சேர்வதும் , இருப்பவன் வீதிக்கு வருவது என்பதும் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது காரணங்களால் ஏற்படும் நிகழ்வுகளே .
அதற்கு விதிவிலக்காக சிலர் வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருப்பவரும் உண்டு .சாலையில் ஓரமாக இருக்கும் ஒரு காகிதம் , காற்றின் சுழற்சியால் ஒரு கோபுரத்தின் உச்சியில் சென்று ஒட்டிக்கொள்ளும் . அதே காகிதம் மீண்டும் காற்றில் கீழே பறந்து வந்து அதே சாலையில் வந்து விழுவதும் இயற்கை. நாம் காகிதத்தின் நிலையை வைத்து அதன் தரத்தை மதிப்பீடு செய்தல், நிர்ணயித்தல் கூடாது .
மனிதனின் உயர்வும் தாழ்வும் அவன் சாதியில் , மதத்தில் , இனத்திலும் இல்லை மற்றும் அவர்களின் பொருளாதார நிலையிலும் இல்லை . என்றுமே நமக்குள் தாழ்வு மனப்பான்மை எழவே கூடாது . அந்த எண்ணமே நமமை மேலும் தாழ்ந்தவராக மனதில் முன்னிறுத்தும் . நம்மை முன்னேற முடியாமல் முட்டுக்கட்டையாக அமைந்திடும் .ஆனாலும் இன்றைய கால கட்டத்தில் பொருளாதார நிலை ஒன்றே மனித இனத்தை பிரிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை .
அதற்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன் . காரணம் இந்த விஞ்ஞான உலகில் பணம் மட்டும்தானே இன்னும் மனிதனை தரம் பிரிக்கிறது என்று நினைக்கும் போது . எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் , இங்கு இல்லாமை இல்லாத நிலை வர வேண்டும் என்ற பாடல் வரிகள் அடிமனதில் வேட்கையாக மட்டுமே இருக்கிறது . நடைமுறையில் சாத்தியமாக முடியாமல் ,சவக்குழியில் புதைக்கப்பட்ட பிணமாக கிடக்கிறது என்பது நினைத்தால் வருத்தமளிக்கிறது . எதிர்காலத்திலாவது இந்த நிலை மாறுமா ...அடுத்த தலைமுறையினர் இதை மாற்றுவார்களா என்ற எண்ணமும் ஏக்கமும் எனது உள்ளத்தில் நிறைந்துள்ளது . காலம்தான் முடிவு செய்யும் .
பழனி குமார்