எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் -78 -------------------------------------- ​​சில நேரங்களில் ஒரு...

  அனுபவத்தின் குரல் -78
--------------------------------------


​​சில நேரங்களில் ஒரு சிலர் ஏதோ ஒன்றைப் பற்றி கூறிடும் போது நமக்கு சரியாக விளங்குவதில்லை . அதற்கு காரணம் அவர்களின் பேச்சில் தெளிவின்மையா அல்லது நமக்கு புரிந்திடும் ஞானம் குறைவாக உள்ளதா என்று தெரியவில்லை ​. அல்லது அவர்கள் சொல்ல வந்த கருத்தும் , அதை கூறுகின்ற விதத்திலும் மாறுபாடு இருப்பதாலா என்றும் நமக்கு விளங்கவில்லை . சிலருக்கு நல்ல அறிவார்ந்த சிந்தனை அவர்களின் எழுத்து அல்லது படைப்பு மூலம் தெரியவரும் . ஆனால் அதை உரை மூலம் வெளிப்படும்போது சற்று வித்தியாசம் தெரியும், குழப்பமாகவும் இருக்கும். இது இயற்கையாக நிகழ்வதே அன்றி வேறல்ல . ஒருசிலரின் பேச்சை கேட்டதும் அவர்களின் தெளிவான பார்வை , கூரிய சிந்தனையின் வெளிப்பாடு நமக்கு நன்றாக புரியும் . உண்மையை சொல்வதானால் அவர்களின் உரையால் நாம் தெளிவு பெறுகின்ற நிலை உருவாகும் . அதற்கு மூல காரணம் தாம் கூற வந்ததை தகுந்த வார்த்தைகளை கொண்டு , எளிய வாக்கியங்களால் , சொற்றொடர்களால் , வார்த்தைகளால் அழகிய முறையில் எடுத்து வைப்பது தான் . அதை பாமரனும் புரிந்து கொள்வான் என்பதில் ஐயமில்லை .ஆனால் சிலரின் படைப்புகள் , அது கட்டுரை வடிவமாக இருந்தாலும் சரி , கவிதை வடிவில் இருந்தாலும் சரி நமக்கு அதன் கருவும் , பொருளும் புரியாமல் போகிறது என்பது எனது அனுபவம் .

இது அனைவருக்கும் பொருந்தாத ஒன்று தான் ..என்னைப் போன்ற சாதாரண சாமானியருக்கு மட்டுமே பொருந்திடும் கருத்தாக கூறுகிறேன் . இந்த பதிவின் மூலமே நான் என்ன கூற வருகிறேன் எனபதும் சிலருக்கு விளங்காமல் இருக்கலாம் . உண்மை தான் . அதை ஏற்றுக்கொள்கிறேன் . ஒருசிலரின் எழுத்துக்கள் படித்தவுடன் ஆழமாக மனதில் பதிந்து விடுகிறது . சிலரின் கவிதைகளும் ஆழ்மனதில் ஒருவித உணர்வுடன் கலந்த தெளிவை , புரிதலை உருவாக்குகிறது என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை .ஆகவே எவரும் தங்களின் கருத்துகளை கூற முன்வரும்போது , அது பேச்சானாலும் , கட்டுரையானாலும் அல்லது கவிதையானாலும் அடுத்தவர் தெளிவுற , ஐயமின்றி புரிந்து கொள்ளும் வகையில் அளித்திட வேண்டும் . 

சிலரின் படைப்புகளால் நாம் நம்மையே மாற்றிக்கொள்ளும் வகையில் அமைந்திடும் . நம் தவறுகளை திருத்திக்கொள்ளவும் நேரிடும் . அதற்கு காரணம் அவர்களின் சிந்தனை , எழுத்தில் பேச்சில் மாறுபட்ட நடைமுறை மேலோங்கி இருக்கும் . பலரின் எழுத்துக்கள் இந்த சமுதாயத்தையே புரட்டிப் போட்ட வரலாறுகளும் உண்டு . பலரின் புத்தகங்கள் இன்னும் பல தலைமுறையாக பொக்கிஷங்களாக போற்றப் படுவதும் , காக்கப்படுவதும் அதுதான் காரணம் .

 இது நான் யாருக்கும் கூறுகின்ற அறிவுரையல்ல , ஆலோசனைதான் . அனுபவத்தின் வெளிப்பாடுதான் .அதனால்தான் பலரின் பேச்சுக்களும் , கவிதைகளும் , கட்டுரைகளும் புத்தகங்கள் வடிவில் இருப்பதால் , வெளிவருவதால், அதுவே நம் வாழ்க்கைக்கு உந்துதல் சக்தியாகவும் , உறுதுணையாகவும் வழிகாட்டுதலாகவும் அமைகிறது .


பழனி குமார் ​​  

நாள் : 4-Feb-18, 9:18 am

மேலே