எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 87 ------------------------------------------- ஒருவர் தனிமையில்...

  அனுபவத்தின் குரல் - 87
-------------------------------------------


ஒருவர் தனிமையில் இருக்கும் போது அவரின் மனதில் எண்ணச் சிதறல்கள் உருவாகி ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும். அதன் பாதிப்பாக பலவித கற்பனைகள் ​உள்ளத்தில் ​தோன்றி மறையும். இது இயல்பாக நிகழும் இயற்கையின் நியதி. அதன் பிரதிபலிப்பு தான் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் என வடிவம் பெற்று படைப்புகளாக மாறுகிறது. சமுதாயத்திற்கு பல்வேறு வழிகளில் பகிரப்படுகிறது. ஆகவே இவை அனைத்தும் வெளிவர அடிப்படை காரணம் சிந்தனையின் கசிவுகள் தான். உணர்வின் ஊற்றுக்கள் வெளிப்படுவதால் அவரவர் சிந்தையை மற்றவர்கள் எடை போட முடிகிறது. ​அதுமட்டுமல்ல , கலங்கிய குட்டைபோல் உள்ள நமது சிந்தையும் தெளிந்த நீரோடை போல ஆகிவிடும் .இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை . குழப்பங்கள் நிறைந்த மனதும் தெளிவுபெற்ற நிலையை அடையும் . கனத்த இதயங்கள் லேசாக மாறும் . இது ஒருவர் எழுதுவதால் மட்டுமே நிகழக்கூடியவை அல்ல . மாறாக அடுத்தவரிடம் நாம் உரையாடல் மூலம் நெஞ்சின் சுமைகளை பகிர்கின்ற நேரத்திலும் உணர்ந்து கொள்ள முடியும். எண்ணங்களின் பரிமாற்றம் பயன் தருமே அன்றி தீங்கு நேர்ந்திடாது .​


மேலும் ​எழுத்துரிமையும் , பேச்சுரிமையும் , கருத்துரிமையும் தடுக்கப்படாமல் சமூகத்தில் நிலைத்து இருத்தல் மிக அவசியமாகிறது . அப்போதுதான் உண்மையான சிந்தனைகளும் , அறிவார்ந்த ஆழ்ந்த கருத்துக்களும் வெளிப்படும் ஒரு மனிதனிடம் இருந்து . அதனால் சமுதாயம் பயனடையும் ...சிந்திக்க ஆரம்பிக்கும் ...மற்றவரை நிந்திப்பதையும் , அறிக்கை போர் மூளாது . இவை அனைத்தையும் எதற்கு கூறுகிறேன் என்றால் , ஒரு தனிமனிதனால் தனது செயலால் மட்டுமே திறனை , ஆற்றலை , அறிவை காட்டிட முடியும் என்ற எண்ணம் மாறி சொல்லாலும் செய்திட முடியும் என்பது என் கருத்து. ஏனெனில் தற்போது சகிப்புத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது . 


நாம் பல நிகழ்வுகள் மூலம் அதனை காண்கிறோம் சமீப காலங்களில். ஒருவரின் பேச்சுக்கு மறுபேச்சு என்ற நிலை மாறி வன்முறை வரை நடைபெறுகிறது . அது ஆரோக்கியமானதும் அல்ல , சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதர்கள் செய்யக் கூடியதும் அல்ல . அதனால் மனமாச்சரியங்கள் ஏற்பட்டு பிரிவினை வாதமென விரிவடைந்து இழிவான சொற்களால் வார்த்தைப் போர் என்றாகி போராட்டங்கள், வன்முறை என்று முடிவடைகிறது .​பிறப்பால் அனைவரும் ​மனிதரே ...ஆனால் குலமென்றும் , சாதியென்றும் , மதமென்றும் மற்றும் மொழிவாரி பிரிவென்றும் பிரித்துப் பார்த்து பழகி விட்டதால் ஏற்படும் விளைவே இதன் அடைப்படை காரணம் . ஒரு தாய் வயிற்றில் பிறக்கிறோம் , மயானம் என்ற மேடையில் எரிக்கப்படுகிறோம் அல்லது மண்ணில் புதையுண்டு போகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . அதற்குள் , இடைப்பட்ட காலத்தில் ஏன் நமக்குள் இந்த மாறுபாடுகள் வேறுபாடுகள் என்றுதான் புரியவில்லை . 


அது இன்றைய காலத்தில் அரசியலுக்கும் பதவி போருக்கும் கருவியாகி , அதுவே ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் ஆயுதமாக பயன்படலாம் ...ஆனால் சமுதாயத்திற்கு , எதிர்கால தலைமுறைகளுக்கும் உகந்தது அல்ல என்பதை எவரும் நினைத்து பார்ப்பது இல்லை . மிகவும் வருத்தம் தரும் விஷயம் இது . ஒன்றிணைந்து தலைவர்கள் செயல்பட்டதால் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது . ஆனால் இன்று நிலை தலைகீழாகி சிதையுண்டு சிதறிக்கிடக்கிறோம் என்பது தான் உண்மை . இந்நிலை மாறிடல் வேண்டும் . தனிமையும் ஒரு இனிமைதான் , இதுவும் எனது அனுபவத்தின் குரல் .​


பழனி குமார் ​  

நாள் : 20-Feb-18, 9:18 am

மேலே