எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிப்ரவரி 20, 2018 அறிவோம் ஆன்மீக புருஷர்களை: (மறுபதிவு)...

 பிப்ரவரி 20, 2018




Image result for ramakrishna paramahamsa painting





அறிவோம் ஆன்மீக புருஷர்களை:   (மறுபதிவு) 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் அவர்களின் அவதார தினம் இன்று:

பெண்களைத்  தெய்வமாக நினைக்கும் அளவுக்கு இந்தியாவின்  கல்வி, கலாச்சார சிந்தனைகள்  உயர்ந்த அளவில் திகழ்கின்றன - என்று மேனாட்டு அறிஞர்கள் பலரும் மூக்கின் மேல் விரலை வைக்கும்  அளவுக்கு  நமது வாழ்வியல் நடை முறைகள்  விதிக்கப்பட்டுள்ளன;  பகுக்கப்பட்டும் உள்ளன.   தனது  மனைவியை தாயாக  மதித்த மஹா  புருஷர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.அத்தகைய பேரொளியாலரைப் பற்றி நாம் எல்லாரும் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா..?!!! 

ஆன்மீகப் பேரொளியை, மேலை நாடுகளுக்கும்  கொண்டுசென்று, அங்கெல்லாம் வேதாந்தத் தத்துவங்களை பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்றால், அத்தகைய  ஒப்பற்றவரை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் அல்லவா. ..!!??  



  ‘‘இவர்கள் போன்ற மஹான்கள் நம் மண்ணில் பிறந்து, வாழ்ந்து, நமக்கெல்லாம் அருளிச்  செய்து வருவதால் தான், நமது பாரத பூமி புண்ணிய பூமியாக திகழ்கிறது" என்று நாம் அடிக்கடி நம் மனக்கண் முன் கொண்டு வருகிறோம் இல்லையா - ” அத்தகைய மஹான்களில்  ஒருவரான  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்க ளது ஆன்மிக வரலாற்றின் சில பக்கங்களையாவது நாம் அனைவரும் திரட்டி, புரட்டி, அவர்களது தெய்விக பாதைதனை பின்தொடர்வது அவசியம் அல்லவா ??!!        

பத்தொன்பதாம்  நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் இவரும் ஒருவர். அனைத்துமதங்களும்  ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதையே பின்பற்றி வாழ்ந்த அருள் வள்ளல் ஸ்ரீ பரமஹம்சர். உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட அவர் இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

காதாதர் சாட்டர்ஜி என்ற நாமகரணத்தோடு மேற்கு வங்காளத்தில் காமர்புக்கூர்  என்ற இடத்தில பிறந்த இவர், தொடக்க காலத்தில்  நாட்டியம், சங்கீதம்,கடவுள் உருவங்களை வரைதல், clay  எனப்படும், களிமண்ணில் சிலைகள் உருவாக்கம் செய்வதிலும் பேரார்வம் காட்டிய அதேநேரம்  கல்வி கற்பதில் ஆர்வம் அற்றவராய் இருந்தார். அவரது சகோதரரான ராஜ்குமார் இறந்தவுடன் கொல்கத்தா   காளி கோயிலின் பூசாரியானார். ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு அன்றாடம் பிரார்த்தனைகளையும் ,தியானமும் மேற்கொண்டவர். தமது அவாவுக்கு பலன் கிடைக்கவில்லையே என்று உணர்ந்த அவர், ஒருநாள்  காளியின் கையில் இருந்த வாளின் துணைகொண்டு தம்மையே மாய்த்துக்கொள்ள எத்தனித்தார். அந்நேரம், தமது  சுயநினைவை இழந்தவராகவும், பரமானந்த ஒளி வடிவம் ஒன்று தம்மை ஆட்கொண்டதாகவும், பின்னாளில் அவர் கூறினார். சாரதா மணி  என்ற பெண் தனக்காக அவதரித்திருக்கிறாள் என்றும், அந்த ஆரணங்கே தம்மை துணையாக ஏற்க வந்தவள் என்றும் சொல்லி,  அவர்களையே மனம் புரிந்து கொண்டார் ஸ்ரீ பரமஹம்சர்.   பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ,  தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார். 

அத்வைத  வேதாந்தம், தாந்த்ரீகம் போன்ற கலைகளில் வித்தரான  அவர், வேதாந்த உண்மைகளை படித்துணர்ந்து அவற்றை பிறருக்கு உணர்த்துவதிலும் அக்கறையும், பாண்டித்யமும் கொண்டிருந்தார். இதனால்,  பாமரர் முதல் மஹா வித்துவான்கள்  வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக விளங்கினார்.  இவரது சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்   நரேந்தரநாத் தத்தா@ விவேகானந்த ஸ்வாமிகள்.  



ஸ்ரீ பரமஹம்சர்  புகழ் உடம்பை எய்த பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி ஆல் போல் தழைத்து வருகிறது.  நமது நாட்டில்  இறையுணர்வு  கலந்த கல்வி, தூய்மை நிறைந்த  பொது தொண்டு,  நாட்டு வளர்ச்சியில் மிகுந்த அக்கறை என்று பல இரத்தின கற்களை தமது தொண்டு என்னும் மணிமகுடத்தில் சுமந்து கொண்டு தலை நிமிர்ந்து நிற்கிறது ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் சில

: : இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமை என்னும் இனிமையை தேடிச்சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும். : உலக வாழ்வில் ஈடுபட்டாலும், ஆதி அந்தம் இல்லாத இறைவனே  நமக்கு சொந்தமானவன் என்னும் மன தின்மையுடன் வாழ்க்கையை நடத்த வேண்டும்.  

: பெரும்பான்மையான மக்கள்  புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடியோ,   பரோபகாரம் மேற்கொள்கின்றனர். சுயநலம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டவை அத்தகைய தொண்டு வகைகள். .

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மஹான்களின் உபதேசங்கள் நம் அறிவுக்கண்களைத் திறக்கும் திறவுகோல்களாக அமைகின்றன என்றால்  ஆச்சரியம்  ஒன்றும் இல்லையே ...      


கடையநல்லூரான்

பதிவு : KADAYANALLURAN
நாள் : 20-Feb-18, 12:34 pm

மேலே