எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 93 ------------------------------​------ ​அன்றைய காலம்...

​அனுபவத்தின் குரல் - 93 
------------------------------​------


​அன்றைய காலம் போல அல்லாமல் இன்றைய நவீன காலத்தில் நமக்கு பல நட்புகள் கிடைக்கவும் , புதிய உறவுகள் உருவாகவும் , தொடர்பு விட்டுப்போன பலரின் உறவும் நட்பும் மீண்டும் தொடர்ந்திடவும் , ஏற்கனவே தொடரும் உறவும் நட்பும் வலுப்பெறவும் , மறந்தவர்கள் மனதில் மீண்டும் இடம்பெறவும் , நினைப்பவர்கள் உள்ளத்தில் நிலத்து இருக்கவும் சமூக வலைத்தளங்கள் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக , சாதனமாக , வழிமுறையாக பயன்படுகிறது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருந்திட வாய்ப்பில்லை . ஆனால் அதே நேரத்தில் ஒரு சில எதிர்மறை விளைவுகள் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளும் நேர்வதை கண்கூடாக காண்கிறோம் , செவிவழியாக அறிகிறோம் . அறிமுகம் அல்லாத ஒருசிலர் இணைவதால் ​தவறுகள் நடப்பதும் நாம் அறிவோம். ஒவொருவரும் மற்றவரை பற்றி ஆய்ந்து அறிந்திடவும் , அவர்களின் குணங்களை நோக்கங்களை தெரிந்து கொள்ளவும் இயலாமல் போவதால் சில சங்கடங்கள், குழப்பங்கள், மன சஞ்சலங்கள் , தேவையற்ற உரையாடல்கள் , கருத்து வேறுபாடுகள் நிறைந்த பதிவுகள் என பலவிதத்தில் உருவாகின்றன . தடுக்கவும் முடியவில்லை களைந்திடவும் இயலாமல் சிலர் தவிப்பதை உணர்கிறோம் . 


எந்தவொரு செயலிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு . ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல. நான் தொடர்ந்து முகநூலில் ( FACEBOOK ) பதிவும் செய்கிறேன் , கருத்தையும் வெளிப்படுத்துகிறேன் , மேலோட்டமாக பார்வையிடுகிறேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் . அனைவரும் செய்வதுதான் ...நான் மட்டுமல்ல . நேரத்தை கடத்திட, எண்ணங்களை எழுத்தாக்கி பதிவிட , மற்றவரின் கருத்தை ஆமோதிக்க , ஆட்சேபிக்க , பல அரிய தகவல்களை அறிந்திட , நேரில் காண முடியாத பல இடங்களை , நிகழ்வுகளை காணும் வாய்ப்பும் பெற்றிட மிகவும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை . சில நகைச்சுவை உணர்வுடன் இருக்கும் , சில ஆதங்கத்தை வெளிப்படுத்தும் , வேறு சில கேளிக்கை மற்றும் கேலியாகவும் இருக்கும் . கடல் கடந்த நட்புகள் நமக்கு உருவாக்கும் . இதெல்லாம் நமக்கு நன்மைகளே . 


நான் கூற வருவது தவறுகள் வரக்கூடாது , விளைவுகள் வலியை தரக்கூடாது , உறவுகள் துண்டிக்கப்படக்கூடாது , நட்பில் விரிசல் வந்திட கூடாது என்பதுதான் . ஒரு சில அப்படி நடப்பதால் இதை பதிவிட , வேண்டுகோளாக விடுத்திட கடமைப்பட்டுள்ளேன் . எதையுமே நாம் பயன்படுத்தும் முறையிலும் , பின்பற்றக்கூடிய வழிமுறையில் தான் இருக்கிறது . எவராலும் நிச்சயம் அனைத்து பதிவுகளையும் காணவும் முடியாது , கருத்துக்களை பதிவிடவும் இயலாது . ஆனாலும் ஒருவரையொருவர் ஓரளவு அறிந்திட , மனதால் எடைபோட , புரிந்துகொள்ள , அறிவுரைகளை ஆலோசனைகளை பெறவும் முடிகிறது . நவீனத்தால் நலனும் உண்டு , சிரமங்களும் உண்டு என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று . நல்லதை ஏற்போம் , தீமைகளை புறந்தள்ளுவோம் . தேவையானதை எடுத்துக் கொள்வோம் , வேண்டாதவற்றை ஒதுக்கிடுவோம் . இது அறிவுரையல்ல , ஆலோசனை மட்டுமே . இதுவும் எனது குறுகிய காலத்து அனுபவத்தின் குரல் . 



பழனி குமார் 
              

நாள் : 5-Mar-18, 9:17 am

மேலே