எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்கள் சிந்தனைக்கு.... ************************​ வல்லரசு நாடாக்குவோம் என்று உறுதிமொழி...

  உங்கள் சிந்தனைக்கு....

************************​

வல்லரசு நாடாக்குவோம் என்று உறுதிமொழி அளித்து ஆட்சிப் பொறுப்பேற்று நிறைவேற்றுவோம் என்ற கூறிய வாக்குறுதிகளை நம்பியவர்கள் அனைவரும் ஆவலோடு இருந்த , இருந்திடும் இந்த காலத்தில் அதற்கு எதிர்மாறாக வன்கொடுமைகள் அதிகரித்து நாடே ஒரு போராட்டக்களமாக மாறிய நிலைதான் இன்று .பாலியல் வன்முறையும் நாளும் அரங்கேறி பால்மனம் மாறாத மலர்களையும் கசக்கிப் பிழிந்து கொடூரமான முறையில் கொலையும் செய்திடும் இந்த கொடுமையான காலத்தில் வாழ்கிறோம் என்பதை நினைத்தால் வருத்தம் மேலோங்கி விரக்தியே அதிகரிக்கும் நிலைதான் இன்று .ஆசிபா ​என்ற சிறுமிக்கு நடந்த பாலியல் பலாத்காரத்தால் 
இன்று நாடே கொதித்து எழுந்துள்ளது . இதற்கு உடனடியாக நீதி கிடைக்க போவதில்லை . நம் நாட்டு சட்டம் அதுபோன்று உள்ளது .
என்ன தண்டனை வழங்கினாலும் அந்த சிறுமி திரும்பி 
வரப்போவதில்லை .அவளுக்கிழைத்த அந்த கொடுமை எவருக்கும் இனி நடக்கவே கூடாது . இரத்தம் கொதிக்கிறது , நெஞ்சம் வலிக்கிறது ..

இதற்கு தீர்வுதான் என்ன ....எப்போது...எந்த முறையில் . என்ற கேள்விதான் அனைவரின் உள்ளத்திலும் எழுகிறது . பொறுப்பில் உள்ள அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது கொடுமையிலும் கொடுமை இன்று .அதைவிட கொடுமை,தவறான பாதை என்னவெனில் மத நம்பிக்கை என்ற பெயரால் ஒருபுறம் திருவிழாக்கள் , பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என செயல்படுவதும், மறுபுறம் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணிகள் என்ற வடிவில் விதிமீறல்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பிரச்சனைகளை உருவாக்குவதும் நாளும் நடப்பது மிகவும் வேதனைக்குரியது. இதற்கு அடிப்படை காரணம் அரசியல் என்பது ஒருபக்கம் இருக்க , மதவெறி என்பதும், கொள்கை மாறுபாடுகள் இருப்பதும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைய காலகட்டத்தில் சமுதாயம் சீரழிவை நோக்க வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. நலிவற்ற சமுதாயம் மலரவேண்டும் என்பதற்காக பாடுபட்ட, கனவு கண்ட, மாபெரும் தலைவர்கள் வாழ்ந்து மறைந்தார்கள்.சாதிமத வெறி முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். மனித நேயம் தழைக்க வேண்டும். பகுத்தறிவு சிந்தனை ஆழ வேரூன்ற வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் சமதர்ம சமுதாயம் மலரவேண்டும்.

இவையெல்லாம் நிறைவேற இன்றைய இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். வரலாற்று உண்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதும் எனது வேண்டுகோள்.

மக்களிடையே சீரான புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். பரந்த மனப்பான்மையும் தன்னலமற்ற மனநிலையும் வளர வேண்டும் .


பழனி குமார்
14.04.2018

நாள் : 14-Apr-18, 2:04 pm

மேலே