நேற்றைய பன்னாட்டு குழந்தைகள் தினம் : ஒரு பறவைப்...
நேற்றைய பன்னாட்டு குழந்தைகள் தினம் : ஒரு பறவைப் பார்வை
நேற்று பன்னாட்டு குழந்தைகள் தினம் பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் பதினான்காம் நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன் தீர்மானப்படி, 1954ஆம் ஆண்டு, சர்வதேச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெஃப் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. யுனிசெஃப், யுனெஸ்கோ, சேவ் தி சைல்டு போன்ற அமைப்புக்கள் பல செயல் திட்டங்களை முன் வைத்து செயல்படுத்துகின்றன. 1920இல் துருக்கியில் ஜூன் ஒன்றாம் தேதி சிறுவர்களை மகிழ்விக்க சில போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 1925, ஜூன் ஒன்றாம் தேதி, ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சீனா கொன்செல் ஜெனரலாகக் கடமையாற்றியவர் - சீன அநாதைச் சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக அவர்களை ஒன்றுதிரட்டி ‘டிராகன் படகு’ விழாவை சிறப்பாக நடத்தினாராம். இதே தினத்தில் ஜெனீவாவில் சிறார் சம்பந்தமான மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜுன் ஒன்றாம் தேதி சிறார் தினமாக தொடக்க காலங்களில் கொண்டாடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எது, எவ்வாறாயினும் , 1925 - ஜூன் ஒன்றாம் தேதி, ஜெனீவா மகாநாட்டினையடுத்து சிறுவர்களுக்கெதிரான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட எல்லாவித துஷ் பிரயோகங்களையும் களைவது தொடர்பாக சிந்திக்கப் பட்டது பாராட்டத்தக்க ஒரு அம்சமாகும். எனவே, இத்தினத்தில் கொண்டாடப்படுகின்றது என்பதை விட இத்தினம் கொண்டாடப்படும் நோக்கம் ஒன்றாக இருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சிறார் சமூகம் உலகளவில் எத்தகைய பாதிப்புக்கு உட்படுகின்றனர் என்பதை அன்றாடம் காண்கிறோம். உணவின்றி பட்டினி போட்டு வேலை வாங்குதல், நெருப்பினால் சூடு, துரத்தி விடுதல், குறைந்த சம்பளம் இத்யாதி என்று வீட்டு நிர்வாகிகளின் கொடூர செயல்களால் சிறார்கள் உலக அளவில் பல நாடுகளில் தெருவில் திரியும் அவலத்தை கண்கூடாக பார்க்கிறோம். இவை தவிர, வறுமை, அது தொடர்பான பசிப்பிணி, அதனோடு மனரீதியாக வெறுப்பு மேற்கொள்ளல், மிக குறைந்தபட்ச அளவு கூட கிடைக்காத சத்துணவு பொருட்கள் - இது போன்ற பல இன்னல்களை பல நாடுகளின் உட்பாகத்தில், காட்டு பகுதிகளில், மலை பிரதேசங்களில் வாழும் சிறார்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் நாம் கண்முன்னே காண்கிறோம்.. யுனிசெஃப் கணிப்பின்படி பதினான்கு வயதுக்கு கீழ்ப்பட்ட சுமார் முப்பதாயிரம் சிறார்கள் கடற்கரைப் பிரதேசங்களில் தன்னினச் சேர்க்கைக்காக பயன்படுத்தப்படுகிறார்களாம்.
வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை. பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமை, பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை, பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை, என்று இன்னும் பல உரிமைகள், சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. : :
கடையநல்லூரான் "