மவனே ! நீயா .. நானா .. பார்த்துடுவோம்...
மவனே ! நீயா .. நானா .. பார்த்துடுவோம் இன்று !!
மதியம். மூன்று மணி முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டது.
சுள்ளுன்னு வெளியில் வெயில் பொரிந்து கொண்டிருந்தது.
சுடும் காற்று திறந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே நுழைந்து அறைகளின் வெப்பத்தை அதிகரிக்க, கம்ப்யூட்டரில் பதிந்திருந்த கண்களில் உஷ்ணத்தை மேலும் அதிகரித்தது.
கண்களில் உறக்கம் வரத்தொடங்கியதால், சற்று நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ள நினைத்து, அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை கழற்றி அருகில் இருந்த டீப்பாய் மீது வைத்துவிட்டு, அப்படியே கட்டிலில் சாய்ந்து கொண்டேன்.
பத்து நிமிடங்கள் கூட கழியவில்லை.
வழக்கம் போல் கண்மயங்கும் நேரம் கைபேசியில் அழைப்பு வந்தது. அருகில் இருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தேன் யாரிடமிருந்து அழைப்பு என்று.
ஐயோ .. கண்ணாடி வேறு அணியவில்லை. எனவே, சட்டென்று கண்களிரண்டையும் கசக்கிகொண்டே நம்பரை பார்த்தேன்.
ஆஹா .. நீ தானா மவனே .. உன்னை நான் இன்று சும்மா விடப்போவதிலை என்று மனதில் நினைத்துக் கொண்டே கைபேசியை எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டு மீண்டும் சாய்ந்துகொண்டேன்.
ஆறு நிமிஷங்கள் .. சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது.
பிறகு எவன் என்னுடன் தொடர்பு கொண்டானோ அவனே
ஃபோன் இணைப்பைத் துண்டித்து விட்டான்.
காலர் டியூன் வாங்கிக்கணுமாம். மாசம் வெறும் முப்பது ரூபா தானாம். தினம் பலமுறை வரும் இப்படி அழைப்புகள்.
எனக்கு கோபம் வராது. வந்தா இப்படித்தான் ஏதாவது செய்வேன்.