எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"பழைய பானை" அது நிலவொளியில் நிழல் தேடும் மனிதர்கள்...

"பழைய பானை"

          அது நிலவொளியில் நிழல் தேடும் மனிதர்கள் பயணிக்கும் சென்னை நகரம். காலையில் பயணிப்பவர்களைவிட இரவுகளில் பறப்பவர்கள் அதிகம். அன்றும் விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது மனிதனோடு சேர்ந்து கடிகாரமும். சீனி கிடைத்த எறும்புகள் கண் சிலிர்க்க ஓடுவது போலவும் அதையும் தோற்கடிக்க தயாரானது ஒரு இனம்.

     வந்தாரை வாழவைக்கும் சென்னை தன்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு எல்லையை தொட்டான் கந்தன். லாரியில் ஏற்றி வந்த பானைகளை பந்துபோல வாங்கி அடிக்கி வைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாய் அவன் மனைவி அடுக்குகளை சரிபடுத்திக்கொண்டிருந்தாள், அருகில் தற்காலிக தூழியில் துவண்டு படுத்துக்கொண்டிருந்தது குழந்தை.

லாரிக்கு வாடகை போக மீதியிருந்த பணத்தை துண்டில் சுருட்டி கட்டிக்கொண்டு வியாபாரத்திற்கு தயாரானான். சூரியன் தாகம் எடுத்து குட்டைகளை குடிக்க தொடங்கியிருந்தது. கூட்டம் கூட தொடங்கியது அவன் கடைக்கு அருகே நிழலை பருக. அவ்வப்போது ஒன்றிரண்டு பேர் வந்து அவனை கடம் வாசிக்க செய்தார்கள்,ஆனால் கச்சேரி முடிவதற்குள் கிளம்பிவிடுவார்கள்.

      தினமும் கச்சேரி நடந்தது ஒன்றிரண்டு பார்வையாளர்களுக்காய். இடுப்பில் கட்டியிருந்த துண்டு கழுத்திற்கு வந்தது. பானைகள் படுத்திருந்தாலும் உண்டியல்கள் உருண்டதால் ஆமையாய் ஊர்ந்தது அவன் நாட்காட்டி.

சிறிது காலத்தில் உருண்டேடிய உண்டியலும் ஊமையாக. வித்துவானோ வேர் பிடித்த கால்களோடு விறகாய் நின்றான். எத்தனை பானைகள் இருந்தாலும் ஆக்கி தின்ன அரிசிக்கு அலயவேண்டி இருந்தது. அட்டையில்லா ஆட்களோடு அஞ்சு ரூபா அதிகம் அழுது கஞ்சன் போல ஆற்றிக்கொண்டான் அளவில்லா பசியை.
மலையாய் அடிக்கியவை எல்லாம் குன்றாய் குறையாமல், கூட்டமாய் குவிந்து கிடந்தது. நிழல் தேடி வந்தவர்கள் எல்லாம் கந்தனை நிற்க வைத்துவிட்டு போனார்கள். காலமும் ஓடியது கல்லறை தேடி. நேராய் நின்றவன், நிழலாய் படுத்துவிட்டான்.

படுத்திருந்தவன் சட்டென்று எழுந்து நின்றான். என்ன நினைத்தான் என்று தெரியவில்லை, அனைத்தையும் அனாதையாய் விட்டுவிட்டு  தன்னத்தனியாக நகர்ந்தான். மாநகரம் அவனை மண்டியிட வைத்திருந்தது. காலையில் நகர்ந்தவன் மாலையில் மறைந்து போயிருந்தான் கந்தன். தன் பணியைமுடித்து பதுங்குவதற்க்காக பாய்ந்துக் கொண்டிருந்தது சூரியன்.

 மந்தமான அந்திமாலை ஒளியில், தூரத்தில் மலையே நகர்ந்து வருவதுபோல இருந்தது கந்தன் மனைவிக்கு. அவனோ கழுதையாய் பொதியோடு வந்துக்கொண்டிருந்தான். பானைக்குவியலின் ஓரமாய் பத்திரமாய் படுக்கவைத்தான் பொதிமூட்டையை, படுத்திருந்த குழந்தை பரவசமாய் எழுந்து வந்து மூட்டையை பிரித்துபார்த்தது. வகைவகையாய், பல்வேறு அளவுகளில், அழகழகாக சிதறி வெளியேறியது " பிளாஸ்டிக் பாட்டில்கள்"...

    சிதைக்காமல் சில் சில்லாய் சிதறிப்போகின பழைய பானைகள்......

பதிவு : Asath
நாள் : 25-Aug-18, 9:46 am

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே