எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாடும் நடப்பும் -------------------------- கடந்த சில மாதங்களாக நாட்டில்...

 நாடும் நடப்பும் 
--------------------------
கடந்த சில மாதங்களாக நாட்டில் பல விசித்திரங்களும், நடைமுறை மாற்றங்களும்,கேலிக்குரிய நிகழ்வுகளும் , அநாகரீக செயல்களும் , தரக்குறைவான மேடை பேச்சுக்களும் அரங்கேறி வருகிறது .இது ஒரு அவலமான நிலை என்றே கூறலாம் . மக்களை மக்கள் மதித்த காலத்தில் வாழ்ந்து , இன்று மனிதம் தொலைத்த மக்கள் வாழும் காலத்தில் வாழ்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது .
இதற்கிடையே விதவிதமான வழக்குகளும் , வியப்பும் விநோதமும் நிறைந்த தீர்ப்புகளும் அதற்கு எதிர்ப்பாக எழுகின்ற வினாக்களும் சாதகமான பதில்களும் பாதகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களும் உலா வருகின்றன .சர்ச்சைகளுக்கும் குறைவில்லை சமரசம் அடையா மனங்களும் குறையவில்லை .சாதிமத வெறியும் வளர்ந்து பரவுகிறதே தவிர அடியோடு அழியவில்லை .மெஞ்ஞானப் போர்வையில் நடந்திடும் அஞ்ஞானங்கள் , அரசியல் சாயமுடன் பகையும் காழ்ப்புணர்ச்சியும் படர்வது நிற்கவில்லை .இதன் முடிவு வருங்கால தலைமுறையை பாதிக்கும் என்று எவரும் நினைப்பதும் இல்லை .மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டிய அரசுகள் , ஆட்சியாளர்கள், இங்கும் அங்கும் தங்கள் சொந்த நலனை மட்டுமே பார்க்கிறார்கள் .
சுயநலம் சுனாமியாய் தாக்குகிறது அதனால் பொதுநலம் போர்வைக்குள் முடங்கிக் கிடக்கிறது .முதலாளித்துவம் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தை நசுக்கப் பார்க்கிறது .ஆத்திகர்கள் மட்டுமே அலையலையாய் செல்வதாக கூறிடும் ஆலயங்களில் வழிபடும் சிலைகளையே காணவில்லை .ஏற்கனவே இருந்த உண்மை சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள் இருப்பதாக செய்திகள் வருகிறது. பலரின் வேடங்கள் கலைந்து உண்மை உருவங்கள் வெளிப்படுகிறது .எதிர்காலத்தில் என்ன எஞ்சியிருக்கும் என்று தெரியவில்லை .

விடையறியா வினாக்கள் ,முடிவடையா முடிவுகள் ,வேதனை தரும் நிகழ்சசிகள் ,ஆழ் கிணற்றின் அடிமட்டத்தில் வாழும் மக்கள் , அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் சமுதாயம் , நாதியற்ற நிலையில் இருக்கும் நடுத்தரக் குடும்பங்கள், இழித்து பேசப்படும் இருட்டில் வாழும் கூட்டம் இவர்களின் நிலை என்றுதான் மாறும் ?

எப்போதும் கேள்விக்குறிதான் மிஞ்சுகிறது இறுதியில் ! வாழ்ந்த காலமே மேல் என்ற மனநிலைதான் என்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறது .


 பழனி குமார் 
              



         

நாள் : 30-Sep-18, 9:19 am

மேலே