வாழ்க்கைப் பாடம் - 10 ------------------------------------- "காலம் பொன்...
வாழ்க்கைப் பாடம் - 10
-------------------------------------
"காலம் பொன் போன்றது , அதை வீணாக்க வேண்டாம் ,இல்லையெனில் பின்னால் வருந்த வேண்டி வரும் " என்று வீட்டில் பெரியவர்களும் , கல்விக்கூடங்களில் ஆசிரிய பெருமக்களும் அடிக்கடி சொல்லி வருவது , இப்போது மட்டுமல்ல , கடந்த பல தலைமுறைகளாக தொடர்வது தான் . ஆனால் எத்தனை பேர் அதனை உணர்ந்து உள்ளத்தில் நிலைநிறுத்தி அதன்படி நடக்கிறார்கள் என்று தெரியாது . நடைமுறை உண்மையை கணக்கெடுத்தால் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தான் அதனை பின்பற்றுவர். அதுவும் இந்த காலத்தில் இளைய தலைமுறையினர் நாம் எதைக் கூறினாலும் அதற்கு மாற்றுக்கருத்தும், வில்லங்கமாகவும் அல்லது எதிர்மறையாகவும் பதில் பேசிவருவது தற்போது பழகிப்போனது . பொதுவாக உயர்ந்த நோக்கமுள்ள கருத்துக்கள் , உண்மையை உரைத்தல் , நியாயம் நீதி நேர்மையை காத்தல் , இவை யாவும் சமூகத்தில் பரவலாக பலரும் நம்ப மறுப்பதும், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் இன்றைய விஞ்ஞான உலகின் விந்தையாக இருக்கிறது .
ஆனால் அதன் பலனை உணராமல் தன்னிச்சையாக செயல்படுதல், அதிலும் தவறான அணுகுமுறையில் கையாண்டால் அதன் பின் விளைவுகள் வருத்தம் தரக்கூடிய ஒன்றாக மாறிவிடும் என்பதை மிகவும் தாமதமாக புரிந்து கொள்கின்றனர் . அதுவே அவர்களின் பலவீனம் .
காலத்தை சரியாக , துல்லியமாக , சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டால் நமது இலக்கை அடையலாம் . வெற்றிக்கனி எளிதில் கிட்டும் .வெற்றி தோல்வி என்பது எப்போதும் நம்மை விட்டு விலகி இருப்பதில்லை , அதிக தூரத்திற்கு தள்ளி செல்வதும் இல்லை . வெற்றி என்பது நமது நிழல் போல அருகிலேயே இருக்கும் .வெற்றியை நம்முடனே தக்கவைத்திருப்பதும் , தோல்வியை விரட்டி அடிப்பதும் நாம் எடுக்கும் முடிவிலும் , சிதற விடாத சிந்தனையை , சீரான முறையில் நமது செயல்களுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் நமது வாழ்க்கைத்தரம் உயரும் . சமுதாயத்தில் சிறந்து விளங்க முடியும் .
இதனை மற்றவர்களைப் பார்த்து நான் அறிந்துக் கொண்ட பாடம் .
பழனி குமார்