எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை எழுதுகிற நேரமா அது! கண்ணீர் மையை எந்த...

கவிதை எழுதுகிற நேரமா அது!

கண்ணீர் மையை 
எந்த எழுதுகோலில் 
ஏற்ற இயலும்! 

சுஜித்!
நான்கு நாட்களாய் 
 என் கன்னத்தில்
கண்ணீராய் வடிந்தாய்! 

என் எண்ணத்தில் 
நீ மட்டுமே 
நள்ளிரவிலும் நடமாடினாய்!

இரண்டு வயது 
இமயமே!
நீயும் 
எனக்கு ஒரு 
ஆறாவது பேரனே!

ஆனாலும் 
ஆறாது நீ தந்த சோகமே!

எண்பதுகளில் 
நான் வாழ்ந்த 
மணப்பாறை மண் அது!

மஞ்சம்பட்டி பள்ளியில் 
கொடியேற்றி பேசியிருக்கிறேன்!

ஆனால் இன்று தான் அழுகிறேன்!

உருகும் மெழுவர்த்தி 
ஏற்றி வைத்து 
உனக்கும் எனக்கும் 
தேவனான யேசுவின் 
முன் வீழ்ந்து அழுதேன்!

இங்கே 
விஞ்ஞானமும் தோற்றுவிட்டது 
உன் அம்மையும் அப்பனும் 
நானும் நம்பிய 
மெய்ஞானமும்
தோற்றுவிட்டதோ?

சின்னக் குழிக்குள் 
சறுக்கி விழுந்தாலும் 
நீ
சக்கரவர்த்தியே!

சாகும்வரை 
மானுடத்தை 
போராட வைத்தாயே!

சிகரமென்பது 
சிரசுக்கு மேல் மட்டும் 
இருக்கவேண்டிய 
அவசியமில்லை!

இமயத்தை! 
இந்தியாவை! 
இந்த உலகத்தை!
இன்று வரை 
அழவைத்த 
நீ அதிசயமே!

புதைந்த உன்னை 
மீட்டெடுத்து மீண்டும் 
புதைத்து விட்டார்களே?

இதற்கு மேல் 
எழுத எனக்கும் வலுவில்லை!
கண்ணீர்! கண்ணீர்!

மோசே  

பதிவு : மோசே
நாள் : 30-Oct-19, 12:39 pm

மேலே