விவாத நிகழ்ச்சிகள் - வீணாகும் நேரங்கள் ------------------------------------------------------------------------ ஒருகாலத்தில்...
விவாத நிகழ்ச்சிகள் - வீணாகும் நேரங்கள்
------------------------------------------------------------------------
ஒருகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் பல்சுவையுடனும் , பலவிதத்தில் பலருக்கும் பயனுள்ளதாகவும் , புதுமையாகவும், உள்நாட்டு முதல் உலகத்துச் செய்திகளை அறிந்திட உதவிடும் அரிய சாதனமாகவும் அமைந்ததது. காலத்தின் நீட்சியில் ,தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப , சமுதாய மாற்றத்திற்கு ஏற்றப்படி , உலகமயமாக்கல் என்ற அடிப்படையில் , தொலைக்காட்சிகள் தம்மை மாற்றிக் கொண்டன . அது தவறில்லை .
ஆனால் இதிலும் அரசியல் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தவுடன் , அதற்கேற்ப நிகழ்சசிகள் மாறின . ஆகவே அவைகளின் தரமும் தகுதியும் வேறுபடத் தொடங்கின.இதில் மேலும் சீரியல் என்ற பெயரில் தொடர் நிகழ்வுகளாய் , நாடகங்கள் உருமாற்றி வரத்துவங்கி இன்று சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்பது என் கருத்து . இதில் மாறுபட்டக் கருத்தும் இருக்கலாம்.
தற்போது விவாதங்கள் என்ற பெயரில் , அனைத்துப் பொருளிலும் மற்றும் அன்றைய நிகழ்வுகள் பற்றியும் காரசாரமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் அரசியல் பிரதானம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அவை ஆக்கப்பூர்வமான , ஆணித்தரமான வாதங்களாக இல்லாமல் , அநாகரீகமாக, அக்கப்போராக ஆகியுள்ளது . இதில் பங்குபெறுவோர் தனிப்பட்ட முறையில் மோதிக் கொள்வதும் , கீழ்த்தரமாக பேசிக் கொள்வதும் அருவருப்பாக உள்ளது . இதனால் மக்களுக்கு என்ன பயன் ? அந்தந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பலன் கிடைக்கும். இது அகில இந்திய அளவில் நடக்கும் அவலம். நல்லவேளை, இந்நிலை "செய்திகள்" சேனல்களில் மட்டும் தான் என்பது ஒரு ஆறுதல்.
விவாதங்கள் நிகழ்ச்சிகள் அனைவருக்கும் வீணாகும் நேரங்கள் என்பது எனது கருத்து .
பழனி குமார்