எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதுவும் கடந்து போம் -------------------------------- உலகின் குளிர் பிரதேசங்களைக்கூட...

இதுவும் கடந்து போம்

  --------------------------------
உலகின் குளிர் பிரதேசங்களைக்கூட சூடாக்கியிருக்கிறது கொரோனா. நிசப்தங்களையே உலகச்சாலைகளின் மொழியாக்கியிருக்கிறது. 

இந்த பூமிப் பந்தின்மீது பூத்துக்கொண்டே போகிற இருமிக்கிருமி, 
பல தேசங்களின் ஆணவங்களை அடக்கி முடக்கியிருக்கிறது. 
அரசுக்கும் மக்களுக்குமான அன்பை வளர்த்திருக்கிறது. 
அரசு இயந்திரத்தை சேவைச்சாலையில் செலுத்தியிருக்கிறது. 
ஆபத்துக் காலங்களில் அரசும் அமைச்சும் காட்டும் முனைப்பைக் கூட்டியிருக்கிறது.
மனித மதங்களையும், அடையாளங்களையும் மறக்கடித்திருக்கிறது. 

வீதிகளின் மூலை முடுக்கெல்லாம்கூட பயம் படர்ந்து கிடக்கிறது. பஞ்சாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் கோழிக்குஞ்சுகளைப்போல குழந்தைகள் வீட்டிற்குள் பதுங்கிக்கிடக்கிறார்கள். 

இயற்கைத்துன்பங்களில் நிலையான ஒன்று நோய். நோய் மனிதனில் இயல்பு. ஒவ்வொரு நாளும் நோய்களை எதிர்த்து, உள்ளுக்குள் போராடிவரும் நம் உடம்பு தான் சூரசம்காரக் கடவுள்.  

பறவை, பாலூட்டி போல மனிதனும் நோய் வழங்கும் காரணியாகிப்போனது இந்த நச்சுயிரியின் கோர உச்சம். இந்த தீநுண்மிக்கு எதிரான ஒட்டுமொத்த தேசங்களின் உயிர்ப்போராட்டம், சங்கிலித்தொடர்போல நீள்கிறது. 

 அனைத்துலக பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஒட்டுமொத்த உலகத் தலைவர்களையெல்லாம் வீட்டின் உள்ளுக்குள் வைத்துப் பூட்டிவிட்டது காலம். உலக உயிர்களின் மீதெல்லாம் பேரன்பு கொண்ட பெரிய மனங்கள் தங்களின் பொருளுதவியை அளிக்கத் துவங்கியிருக்கிறது. கைகுவித்துப் பாராட்டுவோம். எத்தனையோ காலங்களில், ஒதுக்கப்பட்ட நிதி பதுக்கப்பட்டிருக்கிறது. திறமையற்ற செயல்பாடுகளற்ற மனிதர்களால் செலவழிக்கப்படாமலேயே போயிருக்கிறது . 

 கொரோனா உயிர்களை வாரிக்கொண்டு போவதற்கு முன்னால், வழங்கப்பட்டிருக்கும் அரச நிதி,  செயல்பாடுகளுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை. 

நோய்த்தொற்று வளரும் இந்த நேரத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊர்தி ஊட்டுனர்கள், ஊடகவியலாளர்கள், களப்பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள்  மற்றும் காவல்துறையினர் இவர்களின் கடமைக்கு நன்றிபாராட்டி வீட்டுக்கு வெளியே வந்து 5 மணிக்கு கூடி நிற்பதைத் தவிர்த்து, இத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி நவிலும் விதமாக, பொதுவான வாசகங்கள் கொண்ட வாழ்த்து அட்டைகளை நண்பர்கள் மூலம் கைபேசிகளில் பகிர்வோம். அது அவர்களை சென்றடையும்போது மனதை நெகிழ வைக்கும், ஊக்கப்படுத்தும்.

 1960 களில் கண்டுபிடிக்கப்பட்ட கொரொனாவின் மூல மொழி இலத்தீனில், பூக்கள் கொண்ட அரசகிரீட வட்டம் என்பது போன்ற பொருள் கொண்டது. 1956-ல் துவங்கப்பட்ட வூகான் இன்சிட்டியூட் ஆப் வைராலஜி (Wuhan Institute of Virology) சீனாவின் வூகானில் இருப்பதனாலேயே, நிகழ்வுகளை திட்டமிட்ட சதியென்றும், உண்மைக் காரணங்கள் மறைக்கப்படுகின்றன என்பது போன்ற திரிந்த பிறழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களால் கூறப்படும் சதி கோட்பாடுகள் எனப்படுகிற (Conspiracy theories) கருத்துக்கள் கொரொனா குறித்து நிறையவே காணக்கிடைக்கிறது.   

நியூயார்க் போஸ்ட் -ல் அமெரிக்காவின் Steven W. Mosher, வூகான் வைராலஜி ஆய்வக மனிதர்கள்மூலம் நோய் பரவியிருக்கலாம் என தாம் நம்புவதாக வெளியிட்ட செய்தி, மற்றும் சீனாவில், ஒன்றரை கோடி மக்களின் தொலைபேசி இணைப்புக்கள் காணாமல் போய்விட்டதாக கிடைக்கும் அதிர்ச்சி செய்தி, இவற்றை நாம் எப்படி எடுத்துக்கொள்வதென்று புரியவில்லை.  

கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரமின்றி இருக்க நேரிடலாம் என கொரோனா குறித்து ஐ நா சபையும் அச்சம் தெரிவிக்கிறது. 

 இச்சமயத்தில் ஒன்றை நினைவு கூற தேவையாகிறது. அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கடுமையாகச்சாடிய வார்த்தைகள் இன்று உலகச்சூழ்நிலையோடு மிகச்சரியாக பொருந்திப்போகிறது.

உண்மைதான்… நாம் பேசியவற்றில் பெரும்பாலானவை பொருளாதாரம்தானே. வலி மிகுந்த காலங்களில் வலிமை மிக்க வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம். உயிர்களிடத்து அன்பு கொள்வோம். இதுவும் கடந்து போம். 

நாள் : 30-Mar-20, 3:07 pm

மேலே