பிரபல இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அலைபேசி...
பிரபல இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அலைபேசி எண், ஆனந்த விகடனின் புண்ணியத்தால் ஒரு முறை எனக்குக் கிடைத்தது. அப்போது நான் என் தோட்டத்தில் சில காய்கறிகளைப் பயிரிட்டிருந்தேன். ''இந்த தக்காளிப் பொண்ணு பூவெல்லாம் உதிர்த்துடறா.. அந்த வெண்டைக்காய்ப் பையன் நல்லா வளரந்தவன் சோம்பி நின்னுட்டான்'' என்று அவரிடம் கூறி என்ன செய்வதென்று விளக்கம் கேட்டேன். இதில் பையன் பெண் என்பதெல்லாம் உரையாடலில் அப்படியே வந்து விட்டது.. பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை. அவற்றின் போட்டோக்களை அனுப்பச் சொல்லி பொறுமையாக பதிலளித்த அவர் கடைசியாக என்னிடம் கேட்டார். ''ஆமாம், ஏன் தக்காளிய பொண்ணுன்னு சொன்னீங்க'' என்றார். ''தக்காளி பொண்ணுங்கறதாலதானே தக்காளின்னு பேர் வச்சிருக்காங்க.. பையனா இருந்தா தக்காளன்னு பேர் வச்சிருப்பாங்கல்ல.''. என்று வாயில் வந்ததைக் கூறினேன். அவர் கப்பென்று சிரித்து விட்டார். ''வெண்டைக்காயை பையன்னு ஏன் சொன்னீங்க?'' என்றார்.'' வெண்டைக்காய் செடியில காய்க்கிறதை நேர்ல பார்க்கற யாருமே அதைப் பையன்னு தானே சொல்வாங்க ஐயா''.. என்றேன் பணிவுடன்... அப்பாடி... அவர் அப்படி சிரித்தார் ஃபோனில்.. '' ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. '' என்று நிறையப் பாராட்டி விட்டு இணைப்பைத் துண்டித்தார். இதில் சிரிக்க இவ்வளவு இருக்கிறதா என்று நானே வியந்து போனேன்.