பொதுவாக எவரும் என்றும் , அரசியல்வாதிகள் நீங்கலாக, சாதியை...
பொதுவாக எவரும் என்றும் , அரசியல்வாதிகள் நீங்கலாக, சாதியை பார்த்து யாரிடமும் பழகுவதில்லை !
சாதியைக் கூறி நட்பு பாராட்டுவதில்லை !
சாதிக்காரர் என்ற காரணத்தினால் அவருக்கு ஆதரவு அளிப்பதில்லை !
ஒரே சாதி என்று தேடிப் பிடித்து, ஆணும் பெண்ணும் காதலிப்பதில்லை !
எதில் பயணம் செய்ய நேரிட்டாலும், பக்கத்தில் அமர்ந்து இருப்பவர் நமது சாதியைச் சார்ந்தவரா இல்லையா என்று எவரும் நினைப்பதில்லை !இதுபோன்ற இயற்கையாக நிகழ்வுகள் நடைமுறையில் இருந்தாலும், இன்றும் பலரும் வரன் தேடும் படலத்தில் ஒரே சாதியில் மட்டும் பார்ப்பது நடந்து கொண்டிருக்கிறது ! அதிலிருந்து சமுதாயம் மாறவில்லை ! அந்த மாயையிலிருந்து விடுபடவில்லை சமூகம் !
இதெல்லாம் பல அறிஞர்கள், முற்போக்கான எண்ணம் உள்ளவர்கள் பகுத்தறிவுடன் கேட்டால், அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு முத்திரைக் குத்தப்பட்டு ,எதிரிகளாக பார்க்கும் சமுதாயம் இது !
சாதி ஒழிய வேண்டும் என்று மகாகவி பாரதியார் முதல் இன்றைய இளங்கவிஞர்கள் வரை எவ்வளவு பேசினாலும் எழுதினாலும் பலனில்லை. !
அதுமட்டுமல்லாமல் வயதில் முதிர்ந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு சான்றோரும் சபையோரும் நிறைந்த அரங்கில் உரையாற்றும் போது
" நாய்களுக்கே சாதி இருக்கும் போது மனிதர்களில் சாதி மிகவும் அவசியம், தவறில்லை" என்றும், தனது சாதிதான் உயர்ந்தது என்று நியாயப்படுத்தும் அவல நிலை இன்று. !
இதையெல்லாம் நான் பதிவிடுகிற நேரத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது வீதியில்.......அம்மா , சாதி மல்லி இருக்கிறது, மதுரை மல்லி இருக்கிறது, எது வேண்டும் என்று .சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
மனிதன் என்றால் அவன் சாதி மதமற்றவன் என்ற நிலை வரவேண்டும்.
இவ்வளவு ஏன், இன்று வேகமாக பரவும் கொரோனா எனும் கொடிய நோய் சாதி மதம் பார்க்காமல் மனிதனைக் கண்டவுடன் பற்றி கொளாகிறது.
அவர்களை காப்பாற்ற பாடுபடும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாற்றும் முன் களப்பணியாறர்கள், காவல் துறை நண்பர்கள், பல அறக்கட்டளை சேவகர்கள், சமுதாய நலன் காக்க பாடுபடும் நல்ல உள்ளங்கள், எவரும் சாதிமதம் பார்க்காமல் உழைப்பவர்கள் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் எல்லோரையும் நாம் வணங்க வேண்டியவர்கள் !
இதற்கு மேல் கூறினால் நாம் நாத்திகர்கள், இந்தியாவின் எதிரிகள் ( Anti Indian) என்று பட்டம் தந்து சாடுபவர்கள் உண்டு .
இன்னும் சிறிது காலம் சென்றால் நம் பாரத தாய் எந்த சாதி மதம் என்று ஊடகங்களில் விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். வேடிக்கையாக இருக்கிறது இந்த உலகம் !
செவ்வாய் கிரகம் சென்றாலும் இந்த நிலை தொடரும் என்றே நினைக்கிறேன். வாழ்க தாய்த் திருநாடு !
பழனி குமார்
20.05.2021