' நான் மக்கள் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன்; காங்., அதிகாரம்...
' நான் மக்கள் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன்; காங்., அதிகாரம் பெற போராடுகிறது'- மோடி
காலிலாபாத்: உத்திரபிரதேசம் காலிலாபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசுகையில், நான் மக்களின் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன் ஆனால் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவதற்காக போராடுகிறது. மத்தியில் உள்ள தாய்-மகன் ஆட்சி முடிவுக்கு வரும் காலம் வந்து விட்டது என்றார்.
அவர் மேலும் பேசியதாவது; நாட்டில் காங்கிரஸ் ஊழலை தலைவிரித்தாட செய்துள்ளது. இந்த நாட்டின் வளர்ச்சி கீழ்நோக்கி சென்றதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். மத்தியில் ஆளும் தாய்- மகன் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. புதிய அரசு அதிகாரத்தில் அமரப்போகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த நாட்டை துண்டாட நினைக்கின்றனர். நான் இந்தியாவை மிளிர செய்ய விரும்புகிறேன். மக்களை மகிழ்ச்சிப்படுத்தவே நான் போராடுகிறேன், ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர போராடுகின்றனர். சோனியாவுக்கு தெய்வ பக்தி முன்பு இருந்தது இல்லை தற்போது கஷ்ட காலம் என்பதால் சோனியா கோயில்களுக்கு சென்று வழிபடுகிறார். உ.பி.,யில் உள்ள சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி காங்கிரசுடன் மறைமுகமாக கை கோர்த்துள்ளது. மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு மோடி பேசினார்.