சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம், ஆத்திர படுவதை கட்டுப்படுத்தலாம், ஆசை படுவதையும்...
சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம், ஆத்திர படுவதை கட்டுப்படுத்தலாம், ஆசை படுவதையும் கட்டுப்படுத்தலாம் ஆனால் மனதில் எண்ணங்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துதல் என்பது இயலாத காரியம் என்றே கூறலாம். மூக்கு துவாரங்கள் எதற்கு? மூச்சை உள்வாங்கி வெளிவிடத்தானே! நாக்கு எதற்கு? நாம் உண்ணும் உணவின் சுவையை நுகர்வதற்காகத்தானே! கால்கள் எதற்கு? நாம் விரும்பும் பாதையில் நடக்கத்தானே! காது எதற்கு? வெளியில் நடக்கும் அனைத்துவிதமான சத்தங்களையும் கேட்கத்தானே! அப்படி இருக்கையில் மனம் என்பது எண்ணத்தின் வண்ணங்களை , பல கோணங்களில், பல கோணல்களில் எண்ணி, ஆராய்ந்து, மனதளவில் உழன்று திரிந்து விழுந்து புரண்டு குழப்பி குதறி தலையை பிய்த்துக்கொள்ளத்தானே!
பேசுகின்ற ஒருவர் பேசாமல் ஊமையாக இருக்க முடியும் ஆனால் வாயில்லாத இந்த மனதை ஒருபோதும் ஊமையாக்க முடியாது. இந்த மனதை பொறுத்தவரை , ஒருவர் உறுதியுடனும் நேர்மையுடன் மிகவும் முயன்று உழைத்தால் அதிகமாக செய்யக்கூடியது என்னவெனில் அவர் தன்னை அவர் மனதிலிருந்து வேறுபட்டவராக நினைத்து, அந்த நினைப்பை வளர்த்து, ஒருமுகத்துடன் பாடுபட்டால் அவர் தனது மனதை ஒரு பார்வையாளராக கவனிக்க முடியும். இப்படி செய்கையில் ஒருவரின் சிந்தனையிலும் செயலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு அது முடிவில் அவர்க்கு மிகவும் நன்மை அளிக்கும் செயலக நிச்சயம் அமையும். வாசகர்களே, என்ன யோசிக்கிறீர்கள்? யார் யாரோ இந்த பயிற்சியினை செய்கையில், செய்து பலன் பெறுகையில், நாம் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும்? வாங்க, இன்றிலிருந்து தினமும் அமைதியான சூழ்நிலையில்( முடிந்தவரை) , பத்திலிருந்து பதினைந்து நிமிடம் மௌனமாக நம்மை நாமே கவனிப்போம். நம்முள் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் எண்ண விசிறியின் ஆடலையும் பாடலையும் ஆர்பரிப்பையும் உற்சாகத்துடன் ஒரு பார்வையாளராக பார்ப்போம், ரசிப்போம், வியப்போம்.
முக்கிய குறிப்பு :
"பார்வையாளர் என்பதின் அர்த்தம் நடப்பதை பார்ப்பது ஒன்றே தவிர பார்ப்பவைகளுடன் சேர்ந்து இயங்குவதற்கு அல்ல, மனதில் நடக்கும் எண்ணங்களில் பங்கு கொள்வதற்கு அல்ல. வெறுமனே சும்மா ஒரு ஓரத்தில் நின்றோ உட்கார்ந்தோ கவனிக்கணும். அவ்வளவே. இதை மட்டும் நினைவில் கொண்டு இந்த பயிற்சியை செய்யுங்கள். ஒரு வாரம் பாத்து நாட்கள் செய்த பின், உங்களில் ஏதேனும் சிறிதளவாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று உண்மையாக ஆய்ந்து பாருங்கள். நூறில் ஒரு சொட்டு முன்னேற்றம் காணப்பட்டாலும் இந்த பயிற்சியினை தொடர்ந்து இடைவிடாது செய்யுங்கள். இந்த பயிற்சியினை செய்கையிலாவது நாம் வேறு ஒருவரை பற்றியோ வேறு ஒரு விஷயத்தை பற்றியோ சிந்திக்காமல் இருக்கலாமே.