மனதின் எதிரொலி - 3 ---------------------------------------- பொதுவாக ஒருவருக்கு...
மனதின் எதிரொலி - 3
----------------------------------------
பொதுவாக ஒருவருக்கு சில நேரங்களில் அவசியம் என்று நினைக்கும் போது , மற்றவருக்கு அறிவுரை கூறுவார்கள் , ஆலோசனை வழங்குவார்கள் . இது அவருக்கு கிடைத்த அனுபவத்தால் , ஆற்றலால் , பெற்ற அறிவால் , அதனை அடுத்தவருக்கு சொல்வது இயற்கை. அதிலும் சிலர் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் கூறுவது வழக்கமான ஒன்று, அது தவறில்லை .
அதை ஏற்றுக் கொள்வதும், செவிமடுத்து கேட்டு அதன்படி தன்னைத் திருத்திக் கொள்வதோ , மாற்றிக் கொள்வதோ அவரவர் விருப்பம். நிச்சயம் ஒருநாள் அவர்கள் அந்த அறிவுரையை , ஆலோசனையை நினைத்துப் பார்க்கும் காலம் வரும். அது காலத்தின் கட்டாயம் .
இந்த செயல் ஆண்டாண்டு காலமாக நடந்தாலும் , ஒருசிலர் அடுத்தவர் தனக்கு அவ்வாறு அறிவுரை கூறினால் கோபம் வரும் . ஏற்க மறுப்பார்கள் .ஒருசிலர் தம்மை மாற்றியும் கொள்வார்கள் . நாம் யாரையும் கட்டுப்படுத்த முடியாது , கட்டாயப்படுத்த முடியாது . இதனால் தேவையற்ற பிரச்சினைகள் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் . அதனால் விரோதம் உருவாகும் வாய்ப்பு உண்டு .
மேலும் இது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்பதால் அவரே என்றாவது ஒருநாள் வருந்துவதோடு, கேட்காமல் விட்டது பெரிய தவறு என்று உணர்கின்ற வகையில் ஒரு நிகழ்வு நடக்கும் என்பது இயற்கை. இதை நாம் பல நேரங்களில் கண்டு இருக்கிறோம் .
அப்படி ஏதாவது உங்களுக்கு ஆலோசனையோ அறிவுரையோ வழங்கினால் பொறுமையாக கேளுங்கள் . பிறகு நீங்கள் தனியாக உள்ளபோது ஆழ்ந்து சிந்த்தித்து ஒரு முடிவு எடுங்கள் . பொறுமை காத்தலும் , அமைதியாக இருத்தலும் மிக அவசியம் . அள்ளித் தெளித்த கோலம் போல நாம் எடுக்கும் அவசர முடிவுகள் தான் நம்மை தவறான முடிவுக்கு வழி வகுக்கும் .
எனது அனுபவம் காரணமாக இது என் மனதில் எதிரொலியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது .
பழனி குமார்
09.12.2021