கோவை நகரைச் சுற்றி வசிக்கும் இலக்கியவாதிகளுக்கு ஒரு அன்பான...
கோவை நகரைச் சுற்றி வசிக்கும் இலக்கியவாதிகளுக்கு ஒரு அன்பான அவசர அறிவிப்பு..!
-----------------------
தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தால் வெளியிடப்படும் “சப்பே_கொகாலு” - [ ஊமையின் குழல் ] என்ற இந்நூலில், இருளர்களின் பாடல்களைத் தொகுத்து அந்தப் பாடல்களுக்கு உயிர்ப்பு மிக்க புனைவுகளைப் படைத்துள்ளார் கவிஞர் ஒடியன் லட்சுமணன்.
கவிஞர் லட்சுமணனுக்கு “சப்பே கொகாலு” இரண்டாவது படைப்பு. இவரின் முதல் படைப்பான “ஒடியன்” முதன்முறையாக பழங்குடிகளின் மொழியில் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பாகும். லட்சுமணன் தனது ஆற்றல் மிக்க கவிதைகளில் வெளிப்படுத்திய உவமைசார் அரசியல் மூலமாக தமிழ்க்கவிதை உலகின் கவனத்தைப் பெற்றவர்.
அரிதாகவே கதை சொல்லும் மரபு உள்ள பழங்குடிகளின் பாடல்களைத் தொகுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவர்களுடன் பயணிக்காத எவரும் அவர்களின் பாடலுலகை ஒருக்காலும் புரிந்து கொள்ள முடியாது.
ஆனால், கோவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் இருளர் மக்களுடன் மேலாக ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து செயல்படுபவர் என்ற முறையில் ஒரு நீண்ட பயணத்தின் மூலமாக இம்மக்களின் பாடல்களின் தொகுப்பை கடுமையான முயச்சிகளுக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி சாத்தியப்படுத்தியுள்ளார் கவிஞர் லட்சுமணன். இந்த உழைப்பு என்பது மரியாதைக்குரிய ஒன்று.
பழங்குடி மக்களின் மொழிகள் அவர்களது ஆயிரமாயிரம் ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களைச் சேமித்து வைத்துள்ள புதையல்களாகும். இப்பாடல்களின் அடிச்சுவடிகளைப் பின்பற்றி நாம் அவர்களின் கடந்த கால வரலாற்றுக்குள் எளிதாக நுழைந்துவிட முடியும். இப்பாடல்கள் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன.
எந்த்வொரு குருவுமின்றி சுயம்பாக எழுச்சி பெற்று, தாங்களே உருவாக்கிய இசைக் கருவிகளைக் கொண்டு எழுப்பும் பழங்குடி பாடல்களானது ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் பெருங் கொடையாகும்.
இத்தைகய சிறப்புக்குரிய “சப்பே கொகாலு” நூல் வெளியீட்டு விழா, நாளை -15-6-2014 ஞாயிறு காலை 10 மணியளவில் கோவை -திவ்யோதயா -(ரயில் நிலையம் எதிரில்)- அரங்கில் நடைபெறவுள்ளது.
அவ்விழாவில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.! -முக நூல் பதிவு -
வருக! வருக!
-தாமதமான பதிவுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்.!-பொள்ளாச்சி அபி