உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் நூல் ஆசிரியர் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

(Tamil Nool / Book Vimarsanam)

உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் நூல் ஆசிரியர் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் நூல் ஆசிரியர் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி விமர்சனம். Tamil Books Review
உன் பறக்கும் முத்தங்களும்,
என் பட்டாம்பூச்சிகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு,
சேலம்-636 015. விலை : ரூ. 50. பேச : 98429 74697

*****
“உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம் பூச்சிகளும்” – நூலின் தலைப்பே இது காதல் கவிதைகளின் தொகுப்பு என்பதை பறைசாற்றி விடுகின்றது. நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்கள் காதல் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இந்த நூலை வெளியிட்ட இனிய நண்பர் வாசகன் பதிப்பக உரிமையாளர் கவிஞர் ஏகலைவன் அவரகளுக்கு பாராட்டுக்கள். அட்டைப்படங்கள் வடிவமைப்பு, உள்அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளது.

பேராசிரியர் முனைவர் மு. பழனிஇராகுலதாசன், பேராசிரியர் முனைவர். மு. பாண்டி, இணைப் பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, இணைப்பேராசிரியர் முனைவர் சு. இராசாராம் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பவையாக உள்ளன.

நூலாசிரியர் பெயர் சரவணராஜ். இவர் தனது மகன் பெயரான துஷ்யந்த் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டு புனைப்பெயராக்கி எழுதி வருவது வித்தியாசமான செயல்.

இவர், இந்த நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை-யாக்கி இருப்பது பாசத்தின் வெளிப்பாடு. இவரது முதல் நூல் கோவை விஜயா பதிப்பக வெளியீடாக வந்து வரவேற்பைப் பெற்றதன் விளைவாக விளைந்த இரண்டாவது நூல் இது.

நீ
என்
அருகிலிருந்த பொழுதெல்லாம்
அறிய முடியாத
காதலை
ஒரு நாள் நீ
விலகியிருந்த போது
விளங்கிக் கொண்டேன்.

பிரிவு என்பது காதலை உணர்த்தி விடும் என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார். காதலி என்பவள் அழகாய் இருந்தால் மட்டும் போதாது, அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.

நீ
அழகாய் இருக்கிறாய்
அது போதும்
என் காதலுக்கு!
நீ
அன்பாய் இருக்கிறாய்
அது போதும் நான் வாழ்வதற்கு!

காதலியின் சிரிப்பு, காதலுக்கு கவிதைகளை கொட்டிக் கொண்டே இருக்கும் என்கிறார். காதலி சிரிக்க சிரிக்க கவிதைகள் பிறக்கும் என்கிறார்.

நீ
குலுங்கிச் சிரிக்கையில்
கொட்டிச் சிதறுகின்றன
எனக்கான கவிதைகள்
ஆமாம்
‘நாவல்’ மரம் போல்
நீ என்ன
கவிதை மரமா?

முன் பின் என்ற முரண்சுவையுடன் வடித்து இருக்கும் கவிதை நன்று. காதலியின் கூந்தலையும் பாராட்டி உள்ளார்.
நீ
முன்னிழுத்து விடும்
உன் கூந்தல் தான்
என்னை உன்
பின்னிழுத்து வருகிறதென்று
புரியாதா உனக்கு?

சங்க காலத்துப் பாடலை நினைவூட்டும் வண்ணம் எழுதிய கவிதை ஒன்று.
வேறு வேறாய்
இருந்த நம்மை
வேர்களாக்கிக்
கொண்டது
காதல்!
காதலி அருகிலிருந்தால் காதலனுக்கு அது போன்ற மகிழ்ச்சி வேறில்லை.
உன்
பக்கத்தில் உட்காரும்
பொழுதுகளில் எல்லாம்
சொர்க்கத்தில் உட்காருவதாய்ச்
சுகப்படுகிறது மனசு !

சொர்க்கம் என்பதே கற்பிக்கப்பட்ட கற்பனை தான். சொர்க்கம் என்றால் இன்பமயமானது என்று கற்பித்து விட்டனர். ஒரு மனிதன் இறந்ததும் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம் ; எரித்தால் சாம்பலாகி விடும், புதைத்தால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும். பிறகு சொர்க்கம் போவது எங்ஙனம்? என்று யாரும் யோசிப்பதில்லை.

காதல் கவிதை நூல் என்றால் முத்தக்கவிதை என்பது இல்லாமல் இருக்காது. காதலின் முன்னுரையே பலருக்கு முத்தத்தில் தான் தொடங்குகின்றது.

ஒரு முத்தத்தைக்
கொடுத்து விட்டுப்
பல முத்தங்களை
வாங்கிப் போகிறாய்
நீ என்ன
முத்தத்திற்குச்
சில்லரை மாற்ற வந்தவளா?

காதலை கடமைக்காக புரியாமல், காதலை உணர்ந்த உயிராக நேசிக்க வேண்டும். காதலுக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் காதலை இழக்கக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக காதலை உயிர் என்கிறார்.
எனக்கு உயிர் நீ
உனக்கு உயிர்
நான் !
நமக்கு உயிர்
காதல்!
காதலியை நிலவோடு ஒப்பிடுவது எல்லா கவிஞர்களுக்கும் வாடிக்கை தான். ஆனால் நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் அவர்கள் நிலவோடு காதலியை வேடிக்கையாக, வித்தியாசமாக ஒப்பிட்டுள்ளார்.

நம் குழந்தைகள்
கொடுத்து வைத்தவர்கள்!
அமாவாசையில் கூட
நிலாச் சோறு உண்பார்கள்
உன் முகத்தைப் பார்த்தபடி!

இயற்கையாக வரும் மழையை காதலி கொண்டு வந்த பரிசு என்கிறார். கவிதைக்கு கற்பனையும் பொய்யும் சுவை கூட்டும் என்பது உண்மை.

முதல் நாள் சந்திப்பிலேயே
மழை கொணர்ந்து
பரிசளிக்கிறாய்!
எனக்கு மழை பிடிக்குமென
எப்படித் தெரியும் உனக்கு?

கடல் அலை வந்து போவதை கண்ணுற்ற கவிஞர் செய்த கற்பனை மிக அதிகம் என்றாலும், நம்ப முடியாதது என்றாலும் ரசிக்கும்படி உள்ளது என்பதே சிறப்பு.

நீ
கடலில் குளித்துக்
கரையேறி விட்டாய்
என்னையும் உன்னோடு
கூட்டிப் போ!
கூட்டிப் போ! என்று
உன் காலடியில் விழுந்து
கெஞ்சுகிறது கடல் அலை!

மிகப்பெரிய விமானம் கூட மிகச் சிறிய பறவை மோதி விபத்து நேர்ந்து விடும் என்ற செய்தியைப் படித்தவர் வடித்து விட்டார் கவிதை.
நீ என்னை
உரசிச் சென்ற
ஒரு கணத்தில் தான்
உணரத் தொடங்கினேன்
பறவை மோதி
விமானம்
விபத்துக்குள்ளாகும் என்ற
உண்மையை!

காதலி பெயரை காதலன் உரக்க இல்லாவிட்டாலும் உள்ளத்தின் உள்ளே உச்சரித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.

உன் பெயர்
கிளிப்பிள்ளையாக்குகிறது
என்னை !
இப்படி காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டுகள். அவரிடம் ஒரு வேண்டுகோள். தங்களது மூன்றாவது நூல் சமுதாயக் கவிதைகளாக அமையட்டும்.


.

சேர்த்தவர் : கவிஞர் இரா இரவி
நாள் : 14-Nov-14, 10:35 pm

உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் நூல் ஆசிரியர் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே