சரசுவதி அந்தாதி - கலித்துறை பாகம் 4

சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. 16

கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. 17

தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. 18

கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. 19

காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 20


கவிஞர் : கம்பர் (11-Apr-11, 11:06 am)
பார்வை : 54


மேலே