புறநானூறு பாடல் 8 - சேரமான் கடுங்கோ வாழியாதன்

இம்மன்னன் சேரமான் கடுங்கோ வாழியாதன், அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் மகனானப் பிறந்தவன். இவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் கூறப்படுவான். இவன் திருமாலிடத்து மிக்க ஈடுபாடு கொண்டவன். இவன் இருபத்து ஐந்து ஆண்டு ஆட்சி புரிந்தான் எனப்படுகிறது.

இப்பாடலைப் பாடிய கபிலர் பாண்டிய நாட்டில் பிறந்த அந்தணர். வேள்பாரியின் உயிர்த் தோழர். இவரால் சிறப்பிக்கப்பட்ட வள்ளல்களும் வேந்தர்களும் பலர். இவர் குறிஞ்சித்திணை பாடுவதில் நிகரற்றவர்.

இவர், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி இயற்றிய பாடல்கள் பதிற்றுப் பத்தில் ஏழாம் பதிகமாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதிகத்தால் மகிழ்ச்சி அடைந்த இம்மன்னன், கபிலருக்கு நூறாயிரம் பொற்காசுகள் தந்து, நன்றா என்னும் குன்றேறி நின்று, கண்ணிற் கண்ட இடமெல்லாம் காட்டி பரிசாக வழங்கினான்.

இப்பாட்டில் கபிலர் சூரியனை நோக்கி, ‘வீங்கு செலல் மண்டிலமே! நீ பகற்பொழுதை உனதாக்கிக் கொள்வாய்! திங்களைக் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறாய்! மாறி மாறி வருகிறாய்! மாலையில் மலைமுகட்டில் மறைந்து ஒளிகின்றாய்! நீ பகல் பொழுதில் மட்டும்தான் உன் கிரணங்களைப் பரப்பித் தோன்றுவாய்! இத்தனை குறைகளை உன்னிடம் வைத்துள்ள நீ சேரலாதனுக்கு ஒப்பு எனக்கொள்வது எப்படி? இது உனக்கு ஆகாது’ என்று சூரியனைப் பழிப்பது போல சேரலாதனைப் புகழ்கிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ
திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப
ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக்
கடந்தடு தானைச் சேர லாதனை 5

யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்
பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொளித்தி
அகலிரு விசும்பி னானும
பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. 10

பதவுரை:

வையங் காவலர் வழிமொழிந் தொழுக – அயல் நாட்டு மன்னர்களும், காக்கும் அரசரை வழிபட்டு மாறுபடாமல் நடந்து கொள்ளவே

போகம் வேண்டி – இன்ப நுகர்ச்சியை விரும்பியும்

பொதுச்சொல் பொறாஅது – இப்பூமி பிற வேந்தர்க்கும் பொது என்னும் சொல்லுக்குப் பொறுக்காமல்

இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப – தன் நாடு சிறிது என்ற எண்ணம் மேலும் பிற நாட்டின் மேல் கவனத்தைச் செலுத்த

ஒடுங்கா உள்ளத்து – தணியாத உள்ளத்துடன்

ஓம்பா ஈகை – பொருளைக் குறைவில்லாது வளங்கும் வள்ளன்மையும் உடைய

கடந்து அடு தானைச் சேரலாதனை – எதிர்நின்று கொல்லும் படையையுடைய சேரலாதனுக்கு

வீங்கு செலல் மண்டிலம் – தினமும் சுழற்சியாய் பயணம் செய்து கொண்டிருக்கும் சூரியனே!

யாங்கனம் ஒத்தி – எவ்வாறு ஒப்பாவாய்

பொழுது என வரைதி – பகற்பொழுதை உனதாக்கிக் கொள்கிறாய்

புறக்கொடுத்து இறத்தி – நிலவு வருவதைக் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறாய்

மாறி வருதி – நிதமும் வருவதும் போவதுமாய் ஒவ்வொரு ராசிக்கேற்ப மாறி வருகிறாய்

மலை மறைந்து ஒளித்தி - மலைமுகட்டில் மறைந்து ஒளிகின்றாய்

அகல் இரு விசும்பினானும் – அகன்ற பெரிய ஆகாயத்தில்

பகல் விளங்குதி பல்கதிர் விரித்தே - நீ பகல் பொழுதில் மட்டும்தான் உன் கிரணங்களைப் பரப்பித் தோன்றுவாய்!

பொருளுரை:

தினமும் சுழற்சியாய் பயணம் செய்து கொண்டிருக்கும் சூரியனே!

நீ பகற்பொழுதை உனதாக்கிக் கொள்கிறாய்! நிலவு வருவதைக் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறாய்! நிதமும் வருவதும் போவதுமாய் ஒவ்வொரு ராசிக்கேற்ப மாறி வருகிறாய்! மலைமுகட்டில் மறைந்து ஒளிகின்றாய்! அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் மட்டும்தான் உன் கிரணங்களைப் பரப்பித் தோன்றுவாய்!

அயல் நாட்டு மன்னர்களும், இந்நாட்டைக் காக்கும் அரசரை வழிபட்டு மாறுபடாமல் நடந்து கொள்ளவும், அதன் விளைவாக இன்ப நுகர்ச்சியை விரும்பியும், இப்பூமி பிற வேந்தர்க்கும் பொது என்னும் சொல்லுக்குப் பொறுக்காமல், தன் நாடு சிறிது என்ற எண்ணம் மேலும் பிற நாட்டின் மேல் கவனத்தைச் செலுத்த தணியாத உள்ளத்துடன், பொருளைக் குறைவில்லாது வளங்கும் வள்ளன்மையும் உடைய, எதிர்நின்று கொல்லும் படையையுடைய சேரலாதனுக்கு எவ்வாறு ஒப்பாவாய்?

இப்பாடல் பாடாண்டிணை ஆகும்.

துறை: ஒடுங்கா வுள்ளத்து ஓம்பா ஈகை என தணியாத உள்ளத்துடன், பொருளைக் குறைவில்லாது வளங்கும் வள்ளன்மையைக் கூறுவதால் இப்பாடலின் துறை இயன்மொழி ஆகும்.

புறப்பொருள் வெண்பாமாலை பூவை என்பது காயாம்பூ என்றும், காயாம்பூ மேனியன் திருமால் என்றும், அரசனைத் திருமாலோடு ஒப்பிட்டும் பாடுவது பூவைநிலை எனக் கூறுகிறது.

இப்பாடலாசிரியர் கபிலர் சேரமான் கடுங்கோ வாழியாதனை ஞாயிற்றுடன் ஒப்பிட்டு, ’சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்’ என்று பாடுவதால் இப்பாடல் பூவைநிலைத் துறையும் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-13, 8:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 429

சிறந்த கட்டுரைகள்

மேலே