புறநானூறு பாடல் 39 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிமுகம் காண்க)

இப்பாட்டில் மாறோக்கத்து நப்பசலையார், ”வளவ! புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி உரல் போன்ற பாதங்களுயுடைய யானையின் பெரிய தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட வெண்மையான எடை காட்டும் நிறைக்கோல் அமைந்த தராசில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே!

நீ அவன் மரபில் வந்தவனாதலால், இரந்தோர்க்குக் கொடுத்தல் உனது இயல்பேயன்றி உனக்குப் புகழ் இல்லையே! அசுரர்க்குப் பகைவர்களாகிய தேவர்களே உன்னை நெருங்குவதற்கு அஞ்சும், அணுகுவதற்கு அரிய மிகுந்த வலிமையுள்ள வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைக்கும் பொழுது இங்குள்ள பகைவர்களைக் கொல்வது உனக்குப் புகழும் இல்லையே!

கெடுதல் வேறு ஏதுமின்றி, வீரம் பொருந்திய சோழரது உறையூரின் அவையில் அறம் எப்பொழுதும் நின்று நிலைபெற்றுள்ளதால் முறைசெய்து நல்லாட்சி செய்வதும் உனக்குப் புகழ் தருவது இல்லையே!

அதனால் வீரம் மிகுந்து எழுந்த போரை வென்ற கணையமரத்துக்கு இணையான திண்மையான தோளினையும் கண்ணைக் கவரும் மாலைகளை யும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய வளவனே!

அதனால், உனது சிறப்பு மிக்க வலிய தாள்களைப் பாடும்பொழுது, உயர்ந்த எல்லையை அளந்தறிய முடியாத பொன் போன்ற நெடிய சிகரங்களை யுடைய இமயத்தில் ஏற்றப்பட்ட தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்த, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய நெடிய தேர்களை யுடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத வஞ்சி நகரை அழித்த பெருமையை நான் எவ்வாறு சொல்வேன்! நின் வெற்றி யான் பாடும் திறமன்று” என்று இக் கிள்ளி வளவனைப் பாராட்டுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதனின் புகழு மன்றே சார்தல்
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற் 5

றூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று
மறங்கெழு சோழ ருறந்தை யவையத்
தறநின்று நிலையிற் றாகலி னதனால்
முறைமைநின் புகழு மன்றே மறமிக் 10

கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கன மொழிகோ யானே யோங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்
டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி 15
மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே.

பதவுரை:

புறவின் அல்லல் சொல்லிய – புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி

கறை யடி யானை வான் மருப் பெறிந்த – உரல் போன்ற பாதங்களுயுடைய யானையின் பெரிய தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட

வெண் கடைக் கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக – வெண்மையான எடை காட்டும் நிறைக்கோல் அமைந்த தராசில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே!

ஈதல் நின் புகழும் அன்றே – இரந்தோர்க்குக் கொடுத்தல் உனது இயல்பேயன்றி புகழ் இல்லையே!

ஒன்னார் சார்தல் உட்கும் – அசுரர்க்குப் பகைவர்களாகிய தேவர்களே உன்னை நெருங்குவதற்கு அஞ்சும்

துன்னரும் கடுந்திறல் – அணுகுவதற்கு அரிய மிகுந்த வலிமையுள்ள

தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் - வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைக்கும் பொழுது

அடுதல் நின் புகழும் அன்றே – இங்குள்ள பகைவர்களைக் கொல்வது உனக்குப் புகழும் இல்லையே!

கெடுவின்று மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற் றாகலின் – கெடுதல் வேறு ஏதுமின்றி, வீரம் பொருந்திய சோழரது உறையூரின் அவையில் அறம் எப்பொழுதும் நின்று நிலைபெற்றுள்ளதால்

முறைமை நின் புகழும் அன்றே – முறைசெய்து நல்லாட்சி செய்வதும் உனக்குப் புகழ் தருவது இல்லையே!

அதனால் மறம் மிக்கு எழு சமம் கடந்த – அதனால் வீரம் மிகுந்து எழுந்த போரை வென்ற

எழு உறழ் திணி தோள் – கணைய மரத்துக்கு இணையான திண்மையான தோளினையும்

கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ - கண்ணைக் கவரும் மாலைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய வளவனே!

யாங்கனம் மொழிகோ யான் – எவ்வாறு நான் சொல்வேன்!

ஓங்கிய வரை அளந்தறியா – உயர்ந்த எல்லையை அளந்தறிய முடியாத

பொன் படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி – பொன் போன்ற நெடிய சிகரங்களை யுடைய இமயத்தில் ஏற்றப்பட்ட தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்த,

மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய - சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய நெடிய தேர்களையுடய சேரன் அழிய

வாடா வஞ்சி வாட்டும் – அவனது அழிவில்லாத வஞ்சி நகரை அழிக்கும்

நின் பீடுகெழு நோன்றாள் பாடுங் கால் – உனது சிறப்பு மிக்க வலிய தாள்களைப் பாடும்பொழுது.

இப்பாடல் பாடாண்திணை ஆகும். பாடு + ஆண் + திணை. பாடுதற்குத் தகுதி உடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை.

’இமயஞ் சூட்டிய ஏம விற்பொறி மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய வாடா வஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்றாள்’ என்று கிள்ளி வளவனின் வீரத்தையும், புகழையும் கூறுவதால் இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை – மன்னனின் இயல்பைக் கூறுதல் இயன்மொழி எனப்படும். இரந்தோர்க்குக் கொடுத்தலும், பகைவர்களைக் கொல்வதும், முறைசெய்து நல்லாட்சி செய்வதும் அரசனாகிய கிள்ளி வளவன் இயல்பாதலால், இப்பாடல் இயன் மொழித் துறையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-13, 10:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 491

மேலே