டாட்டா காட்டப் போறான்நகைச்சுவை நாடகம் பாகம் 2

பாத்திரங்கள்: அவினாசி, அவன் தம்பி மணி சேரன், மணி சேரனின் வகுப்புத் தோழி உதயா, நதிரா.


அவி : வாடா, வாடா.. என்னடா திடீர்னு புறப்பட்டு வந்து நிக்கிற? பரீட்சை முடிஞ்சிடுச்சா?

மணி : பரீட்சை முடிஞ்சிடுச்; ரிசல்ட்டும் வந்துடுச்; அண்ணா யூனிவர்சிட்டியில எனக்கு வேலையும் கிடைச்சுடிச்..

அவி : எதுக்கு இப்படி பேசறே?

மணி : பல்லு வலிண்ணா. ஈறு வீங்கிடுச்சு. எதிர்ல நின்னு பேச முடியல..

அவி : ஓ ! அப்ப இதுதான் ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சமா?

(மணி ஒரு மாத்திரையை போட்டுக் கொள்கிறான்)

மணி : (தயங்கியபடி) அண்ணா, இது உதயா. என் க்ளாஸ்மேட்..இவளுக்கும் அண்ணா யூனிவர்சிட்டியில வேலை கிடைச்சிருக்கு. இவளுக்கு அப்பா அம்மா கிடையாது. இவளை தூக்கி வளர்த்த தாத்தா காலமாயிட்டார். ஓரளவு நல்ல வசதிதான். காரு வீடுன்னு சொத்து இருக்கு....

அவி : (உதயாவை பார்த்து)
உள்ள வாம்மா...இதை உன் இடமா நினைச்சிக்கோ..

(அவர்களை வரவேற்று உபசரிக்கிறான்)

மணி : (உதயாவை கீழே அனுப்பி விட்டு) அண்ணா, உதயாவைப் பத்தி உன் அபிப்பிராயம் என்ன?

அவி : பார்க்க நல்ல பெண்ணாத்தான் தெரியிறா.! கெட்டிக்காரியுமா இருப்பா போலிருக்கு...!

மணி : கெட்டிக்காரிதாண்ணா, இல்லாட்டி இவ சொத்துக்காக இவளை கல்யாணம் பண்ணிக்க மொய்ச்சவங்களை தூர நிறுத்துவாளா?

(உதயா கூப்பிட மணி கீழே போகிறான்)

நதிரா உள்ளே வந்து விஷயத்தை கிரகித்துக் கொண்டே...

நதி : (ரகசியமாக) நான் சொன்னபடி நடக்குதோ?

அவி : உன் வாயில சக்கரையைப் போட....தம்பி இப்பத்தான் என் அபிப்பிராயம் கேக்கறான்... இன்னும் வர வேண்டிய டயலாக் வரல்ல.... எதுக்கும் உனக்கு நேரமிருந்தா நீ அந்தப் பெண்ணுக்கு கம்பெனி கொடு..!

(தம்பியும் உதயாவும் வந்த பிறகு...)

சரி, உனக்கும் உதயாவுக்கும் அடுத்த முகூர்த்தத்தில கல்யாணம் வச்சிடலாமா?

(உதயா சட்டென்று நிமிர்ந்து பார்த்து குனிகிறாள். அதை அவினாசி கவனிக்கிறான்.)

மணி : அண்ணா, அதில்லே. உதயா கணவன் ஸ்தானத்துல தனக்கு ஒரு அம்மாவை எதிர்பார்க்கிறா. ஓரளவு கை நிறைய சம்பாதிச்சு வசதியா இருக்கற ஆம்பளை தன் மனைவி தன்னைப் பார்த்துக்கணும்; தன் சம்பாத்தியத்தை நல்லபடி நிர்வகிக்கணும்னு எதிர்பார்க்கிற போது அதை நியாயம்னு ஒத்துக்கற சமூகம் அதே எதிர்பார்ப்பு ஒரு பெண்ணுக்கு இருந்தா புருஷன்கிற பேரில கூஜா தூக்கச் சொல்றியான்னு எகத்தாளம் பண்றது ஓர வஞ்சனை இல்லியா?

அவி : கண்டிப்பா! எதிர்பார்ப்பு நியாயம்னு வந்திட்டா அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாத்தான் இருக்கணும். ஒவ்வொருத்தரோட குணத்துக்கு ஏத்த மாதிரிதான் வாழ்க்கை; வாழ்க்கைக்கேற்ற வாழ்க்கைத் துணைதான் தேடணும். நல்லபடியான வாழ்க்கை முறைகள் ஆயிரத்தெட்டு இருக்கு. நாம ஒண்ணையே பிடிச்சிட்டு தொங்க கூடாது.... !

மணி : சந்தோஷம்ண்ணா.. எனக்கு அம்மா அப்பா போனதுக்கப்புறம் அந்த குறை தெரியாம வளர்த்து விட்டவன் நீ. உன்னைப் பத்தி நிறைய விஷயங்கள் பேச்சு வாக்கில உதயா கிட்ட சொல்லியிருக்கேன். உதயாவுக்கு நீ பொருத்தமா நல்ல வாழ்க்கைத்துணையா இருப்பேன்னு நான் நினைச்சேன். அதுக்குத்தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன். அவளை உனக்கு பிடிச்சிருந்தா அவளை கல்யாணம் பண்ணிக்கோ. இருந்தாலும் இது உன் இஷ்டம்தான். அவ முகத்தைப் பார் ! உன் அடிவயித்துக்கும் தொண்டைக்கும் ஏதோ உருண்டை ஓடலியா?

அவி : எனக்கு ஓடுறது இருக்கட்டும். வந்ததிலிருந்து நீயே பேசிட்டிருக்க? என் மனம், குணம், காரம் - முக்கியமா என்னோட மாசம் எட்டாயிரம் ரூபா சம்பளம் உதயாவுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். என் எதிர்ல நின்னு என்னைப் பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு அவ ஒரு வார்த்தை சொல்லட்டும்..!

மணி : அதனாலென்ன? உதயா பேச்சுப் போட்டியில முதல் பரிசு வாங்கினவ. அதெல்லாம் டக் டக்குன்னு சொல்லிடுவா.....!

(உதயா அவினாசியை நேருக்கு நேர் பார்க்கிறாள். சொல்ல வந்து சொல்ல முடியாமல் வார்த்தை வாய்க்குள் சிக்க, தலை குனிந்து ஓடுகிறாள்...!)

மணி : ஏய்...ஏய்..!

(மணி பின்னால் ஓடுகிறான். அவினாசி திருக்குறள் புத்தகத்தை எடுத்து எதையோ எழுதி நதிராவிடம் கொடுக்கிறான். நதிரா புத்தகத்துடன் கீழே போகிறாள்.)

மணி : என்ன உதயா, இப்படி பண்ணிட்டே?

நதி : (புன்னகையுடன்) இதத் தான் மௌனம் சம்மதம்னு சொல்றது. அண்ணியை பேர் சொல்லி கூப்பிடாதே! இந்தா.. உங்கண்ணண் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டார்.

(புத்தகத்தில் உதயாவை கல்யாணம் செய்து கொள்ள எனக்குப் பூரண சம்மதம் என்று எழுதியிருக்கிறது)

மணி : ஹைய்யோ ! அண்ணி, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க!

நதிராவும் உதயாவும் சிரிக்கிறார்கள்.


சுபம்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (19-Apr-15, 2:04 pm)
பார்வை : 251

மேலே