ஏழ்மை களைவோம்
நான் ஆணை இடுகிறேன்
இன்று முதல் ஏழைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அதற்காகவே சிறப்பாக ஏழைகள் மகிழ்ச்சியாக இருக்கும் திட்டம்
(ஏ.ம.இ.தி. ) அறிவிக்கிறேன்.
இதன்படி நாட்டில் 75% பேர் ஏழைகள் என அறிவிக்கிறேன்.
இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க பல சலுகைகள் வழங்கப்படும்!
*குடியிருக்க இலவச இடம்
*அரிசி, சில மளிகைப் பொருட்கள் இலவசம்
*உணவு சமைக்க அடுப்பு எரி பொருள் இலவசம்
*இலவசமாக சமயலுக்கு அரைக்க, மாவாட்ட உதவும் கருவிகள்
*ஓய்வில் மனம் களிக்க இலவச தொலைக் காட்சிப் பெட்டி, மின் விசிறி.
*பால் பெற இலவச ஆடு மாடுகள்
*கூடுதலாக நகர் புறங்களில் மலிவு விலையில் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி வழங்கப் படும்.
*ஆலயங்களில் தினம் அன்ன தானம் நடக்கும்
அரசின் கொள்கைப் படி இவர்கள் நிரந்தரமாக அரசு கொடுக்கும் இலவசங்களைச் சார்ந்து இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இதையும் மீறி உழைத்துச் சம்பாதிப்பவர்கள் அரசு நடத்தும் நியாய விலை மது பானக் கடையில் தங்கள் பணத்தைச் செலுத்தி போதை பெற்றுச் செல்ல வேண்டும்..
அரசின் சலுகைகளைப் பெற்று ஏழையாக இருக்க வேண்டும் என்பது மீறக் கூடாத சட்டம்.,
இந்த ஏ.ம.இ. திட்டத்தைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப் படும்.
சட்ட விதிகளை மீறி ஏழையாக இல்லாமல் இருக்க முயல்பவர்கள் தேசத் திரோகம் சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவர் அல்லது நாடு கடத்தப் படுவர்.
குறிப்பிட்ட அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று நிரந்தர ஏழையாக இருக்கக் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
ஒவ்வொரு ஐந்தாண்டும் இவர்களை நிரந்தர ஏழைகளாய் வைத்துக் கொள்ளும் உரிமம் பெற போட்டி நடக்கும்... அதில் வெற்றி பெற பல்வேறு அணிகள் போட்டி போட்டுக் கொண்டு மேலும் பல இலவசங்கள் அளிக்க முன்வரும். போட்டியிடுபவர்கள் ஏழைகளாக இருக்க விரும்புவர்களின் ஆதரவைப் பெற கையூட்டு அளித்தும், பிற வழிகளிலும் முயல்வர். இவர்களும் மகிழ்ந்து தங்களை ஏழையாய் வைத்திருக்கும் உரிமத்தை விட்டுக் கொடுப்பர்.
வருக! வருக!
(தொடரும்,... எச்சரிக்கை!)