என் முதல் காதல் கதை

என் முதல் காதல் இல்லை என் முதல் ஈர்ப்பு எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . ஆனால் அது தான் என் மனதில் அடித்த முதல் அலை.

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் . பட்டாம்பூச்சியாய் பள்ளி செல்வது அப்புறம் சாயுங்காலம் ஆனால் வந்து அம்மாவின் கூட்டில் பிள்ளைபூச்சியாய் மாறி செல்லம் கொஞ்சும் அம்மா பிள்ளையாக தான் இருந்தேன் நான்.

என்றும் போல பள்ளியிலிருந்து சரியாக நாலரைக்கு வீடு திரும்பிய நான் வழக்கம் போல நாள் முழுதும் நடந்த கதைகளை வாய் மூடாமல் சொல்ல ஆரம்பித்தேன் அம்மாவிடம் இடையிடையே அம்மா தந்த டீயை சுவைத்தபடி. எங்கள் கதைகள் முடிந்ததும் அம்மா என் கையில் திணித்த மிக்சர் டப்பாவோடு அன்றைய தினத்தந்தியை எடுத்துக்கொண்டு என் வீட்டு திண்ணையில் சாய்ந்து படிக்க ஆரம்பித்தேன் .

திடீரென ஒரு பறவையின் சத்தம் ஆனால் வழக்கம்போல கீச் கீச் இல்லை சுரேஷ் சுரேஷ் என்றது . அப்போது சத்தியமாக எனக்கு தெரியாது அது அவன் பேரென்றும் அதையே நான் பைத்தியமாய் அசைபோட்டு கொண்டிருக்கப் போகிறேன் என்றும். ஆச்சிர்யமமும் அதிசயமுமாக நான் எட்டிப் பார்த்தபோது என் கண்ணில் பட்டது ஒரு அழகிய பச்சைக்கிளியும் அதன் அருகில் புன்னகை பூத்து கொண்டிருந்த அவன் முகமும். அதன் பின் தினத்தந்தியின் எந்த எழுத்தும் என் மனதில் பதியவில்லை.

அம்மாவிடம் கிளியைப் பற்றி சொன்ன போது ஆமா எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்க என்று சாதரணமாய் சொல்லி விட்டு நகர்ந்தாள். அப்புறம் பக்கத்துக்கு வீட்டு அக்காவிடம் டியுஷன் படிக்க செல்ல பையை எடுத்தேன். அப்புறம் இரவு உணவு என எல்லாம் அதுவரை இயல்பாய் நடந்தது நான் என் தலையணையில் தலை சாயும் வரை .

கண்ணை மூடினால் வந்து ஒட்டிக்கொள்ளும் தூக்கம் அன்று என்னை திக்கு முக்காடத்தான் செய்தது. என் போர்வைக்குள் வந்து பதிந்து கொண்டது அன்று சாயங்காலம் பார்த்த முகம். எவளவோ துரத்த முயன்று பார்த்தேன் அது ஏனோ என் இதயத்தோடு ஒட்டிகொண்டது. இது என்ன உணர்வு ஏன் இப்படி என்று புரியாமல் எப்படியோ போராடி தூங்கிப் போனேன்.

காலையில் அம்மாவிடம் சொல்லத் தோன்றியும் சொல்லாமல் இட்லியோடு சேர்த்து சொல்ல நினைத்ததையும் விழுங்கினேன். முதல் முறையாக அம்மாவிடம் எதோ சொல்ல யோசிக்கிறேன் சே என்னாச்சு என்று உள்ளுக்குள் உளறியபடி அம்மாவுக்கு கையசைத்து விடை பெற்றேன் .

தோழியிடம் மதிய சாப்பாட்டின் போது விஷயத்தை சொன்னபோது சிரித்தாள். கூடவே ரொம்ப சினிமாலாம் பாக்காத டி என்று வேற சொல்லி வைத்தாள். அவளிடம் ஏன் சொன்னேன் என்று யோசித்தேன் ஆனால் அம்மாவிடம் சொல்வதைவிட இதை அவளிடம் சொல்ல வெகு இலகுவாய் இருந்தது.

அந்த சாயங்காலத்தின் வரவை ஏனோ என்னை அறியாமலே அதிகமாய் எதிர்பார்க்க தொடங்கினேன் . தினதந்தியோடு நான் திண்ணை சென்றபோது எங்கள் வீட்டு முல்லையின் வாசம் அன்று அதிகமானது போல் தோன்றியது. வீட்டு முன் நின்ற கொய்யா மரம் அதீத அழகுடன் தென்பட்டது. மெல்ல எட்டி பார்த்தேன் கிளியையும் காணவில்லை கூடவே அவனையும் தான்.

என்னை ரொம்ப ஏமாற்றாமல் கொஞ்ச நேரத்திலே வந்து சேர்ந்தான் கிளியோடும் குட்டி செடியோடும். எதோ பூச்செடி போல தெரிந்தது வெகு நேரமாய் மண்ணை கிளறினான் அப்புறம் செடி நட்டான். வீட்டுக்குள் சென்றவன் எதோ விதைகள் கொண்டு வந்து தூவினான்.

அதன்பின் ஒவ்வொரு நாள் சாயங்காலம் அவனின் குட்டி செடிகளுக்கு தண்ணி ஊற்றி பராமரிப்பது அவனுக்கு வாடிக்கை ஆனது. அந்த குட்டி செடிகளையும் அதைவிட அதிகமாக அதன் சொந்தக்காரனையும் ரசிக்க ஆரம்பிதேன் நான். அந்த செடிகளோடு சேர்ந்து எனக்குள்ளும் எதோ வளர ஆரம்பித்தது .. ஆம் அவன் மேலான ஈர்ப்போ நேசமோ எதோ ஒன்று எனக்குள் வேர் விட்டு வெகு அழகாய் வளர ஆரம்பித்தது ...

அந்த விழிகள் எதேச்சையாக என்னை எப்போதாவது நோக்கியதுண்டு . அதை கண்டதும் உடனே தாழ்ந்து விடும் என் விழிகள் . இப்படியான சுகமான கண்ணாமூச்சிகளோடு கடந்தது ஒவ்வொரு மாலை பொழுதும் . அப்போதெல்லாம் சாயங்காலம் ஆனாலே சொல்லாமலே வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு இனம் புரியாத அதீத சந்தோசம் . பறந்து கொண்டே தினமும் அமர்ந்து இருப்பேன் அந்த குட்டி திண்ணையிலே.

என்றாவது எதாவது அவனோடு பேச வேண்டும் என காத்திருந்தேன் . அதற்க்கான வாய்ப்பும் வந்தது ஒரு நாள். அப்பா சுத்தியல் வேண்டும் என எதிர் வீட்டில் கேட்க சொன்னார் . ஆன்டி ஆன்டி என்று அழைத்தபடியே எங்க வீடு சுவரோடு நின்ற எனக்கு என்னமா என்ற பதிலோடு வந்தது அவன் அம்மா. சுத்தியல் இருக்கா ஆன்டி என்றேன். ஆ இதோ வரேம்மா என்றவள் கைவேலையாக இருந்ததால் சுரேஷ் என குரல் கொடுத்தாள்

ஓரிரு நிமிடத்தில் சுத்தியலோடு என்னருகில் அவன் . பட படவென அடித்த இதயத்தை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு தேங்க்ஸ் என்று மெல்லமாய் சொல்லிவிட்டு சுத்தியலோடு நகர்ந்தேன் தேங்க்ஸ் சுரேஷ் என்று சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன் . ஏனோ அவன் பேரை சொல்ல முடியாமல் விழுங்கினேன்

அப்புறம் ஒரு ஆறு மாதம் இருக்கும் .. வெயில் காலத்தில் என் இதயத்தில் புயல் அடிக்கும் என்று தெரியாமலே அன்றைய கோலத்தை வரைந்து கொண்டிருந்தேன். வெளியே சட சடவென பாத்திரம் உருட்டும் சத்தம் . எதிர் வீட்டு கட்டில் நாற்காலி எல்லாம் தோட்டம் பக்கம் வந்திருந்தது. என்ன இது என நினைத்தபடி அம்மாவிடம் சென்றேன் கோலத்தை முடித்த கையோடு.

அம்மா சொன்னாள் ஆமாடி அவங்க வீடு மாறுறாங்க . ஓனர் கோடை விடுமறையை கழிக்க இரண்டு மாதம் குடும்பத்தோடு இங்கு வராங்களாம். பாவம் அந்த அம்மாவுக்கு இந்த வீட்டை காலி பண்ண மனசே இல்லை என்று சொன்னாள். அந்த பச்சை கிளி சத்தம கேட்காது இனி என்று சோகமாய் சொல்லி விட்டு நகர்ந்தாள்.
அம்மா பச்சை கிளியை மட்டுமா பார்க்க முடியாது இனி அவனை என்று விக்கித்து நின்ற நான் அம்மாவின் தோளில் சாய்ந்து உரக்க அழ வேண்டும் போல் தோன்றியதை அடக்கிவிட்டு குளியலறையில் சென்று அழுது முடித்து அதை மறைக்க முகத்தையும் கழுவி வந்தேன். காலை சாப்பாடு சுத்தமாய் இறங்கவில்லை. ஏண்டி என்ற அம்மாவிடம் வயிறு வலிக்குது அதான் என்று சமாளித்து விட்டு நான் விட்டதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன் .

அப்புறம் ஐயோ இனி அவனை பார்ப்பேனோ இல்லையோ என்ற பயத்தில் வீட்டின் முன்னறையின் ஜன்னலோடு ஐக்கியமானேன். குட்டி போட்ட பூனையை போல தான் அன்று முழுவதும் நடந்து கொண்டிருந்தேன் . அங்கு எல்லாம் வண்டியில் ஏற்றியது போல தெரியவே என்னை அறியாமலே திண்ணையை நோக்கி நடக்க ஆரம்பித்தது என் கால்கள். உட்க்கார மனமற்று கொய்யாப் பழங்கள் பறிக்கும் பாவனயில் நின்று கொண்டிருந்தேன் .

அவன் தோட்டத்தின் பக்கமாய் வந்து தென் செடிகளை பாவமாய் பார்த்தபடி அங்கிருந்த இரு ரோஜா தொட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டான் . அப்போது என்னை ஒரு பார்வை பார்த்தான் . அது தான் கடைசி பார்வை . அவன் விழிகள் என்னிடம் என்ன சொன்னதோ . ஆனால் ஆழமாய் பார்த்தது அதில் சின்னதாய் ஒரு வலி தெரிந்தது .அறியாப் பிள்ளையாய் வந்த விழி நீரை மறைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன் .

நாட்கள் நகர ஆரம்பித்தது சில நேரம் அவனை பார்க்க முடியவில்லை என வாடி போவேன் . சில நேரம் அந்த கடைசி பார்வையில் கலந்திருந்த அன்பை நினைத்து என்னை ஆற்றிக்கொள்வேன். என்றாவது ஒரு வேளை அவனைக் காண்பேன் எண்டு வேறு நம்பிக் கொண்டிருந்தேன் .

அப்புறம் அந்த வீட்டில் எத்தனையோ மாற்றங்கள். புது மனிதர்கள் . புது நாய்க் குட்டி . புது செடிகள். புது வண்ண சுவர் என எத்தனையோ மாறிக் கொண்டிருந்தது . ஆனால் எனக்கு மட்டும் அது அவன் வீடு போலவும் எதிரில் அவன் தோட்டத்து பூக்கள் இருப்பது போன்ற பிரம்மையும் களைய வெகு காலம் எடுத்தது . மாற்றங்களும் காலமும் அழிக்க முடியவில்லை அந்த நினைவுகளை. அவன் பெயரும் அந்த அழகிய முகமும் அந்த கடைசி பார்வையும் என் இதயத்தின் ஒரு ஓரத்தில் வந்து ஒளிந்து கொண்டன.

அன்றைய வலி இன்று இல்லை. ஆனால் அந்த நினைவு தரும் சுகம் இன்றும் அன்று போல தான் . இப்போது அந்த பெயரை எங்காவது கேட்டால் என் இதழ்கள் இதயம் எல்லாம் பூக்கும்.. நான் மீண்டும் அந்த எட்டாம் வகுப்பு மாணவியை போல தான் ஆகிப் போவேன் . தவறாமல் திரும்பி பார்க்கும் என் விழிகள் அது என் சுரேஷாக ஒரு வேளை இருக்க கூடுமோ என்ற குட்டி நம்பிக்கையோடும் தேடலோடும் .

எழுதியவர் : யாழினி வ (20-Apr-15, 12:52 am)
Tanglish : en muthal kaadhal
பார்வை : 994

மேலே