மனசிருந்தா போதும் வாழ்ந்து விடலாம்

உதவி என்றால் என்ன?

உதவி என்பது யோசிக்காமல் உடனே செய்வது.... கணக்குப்பார்க்காமல் இருப்பதைக் கொடுப்பது.... இதனை எனக்கு உணர்த்திய எனது நண்பனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் ஒடிசாவை ஒரு பெரும்புயல் தாக்கியது.... அம்மாநிலமெங்கும் பெருத்த சேதம்... கடலோர மக்கள் எல்லாம் பல உற்ற உறவுகளை இழந்து, வீடிழந்து, பொருளிழந்து, உணவின்றி, மாற்ற உடையின்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்... பெரும் அமைப்புகள், சிறு அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லாம் நாடெங்கும் மக்களிடம் பொருட்களை, பணங்களைப் பெற்று ஒடிசா மக்களுக்கு உதவியாய் அனுப்பிக் கொண்டிருந்தனர்....

அதே போல கல்கத்தா வீதிகளில் என் நண்பனும், அவர்களது கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து கையில் தட்டேந்தி வீதிகளில் போவோர் வருவோரிடமும், கடைகளிலும் எல்லோரையும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்... முடிந்த வரைக்கும் கண்ணில் பட்ட அனைவருமே தன்னிடமிருந்த பணத்தில் ஒன்றோ இரண்டோ, அஞ்சோ பத்தோ, நூறோ ஐநூறோ கொடுத்தனர்...

இவை அனைத்தையும் சாலையோரம் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரத் தாத்தா பார்த்துக்கொண்டிருந்தார்....

அவர்களை கைக்காட்டி அருகே வரும்படி அழைத்தார்....

அவர்களிடையே நடந்த உரையாடல்....

"என்னப்பா என்ன எனக்குப் போட்டியா? நீங்கெல்லாம் இறங்கீட்டீங்களா?"

"அப்படி இல்ல தாத்தா... ஒடிசாவுல ஒரு பெரிய புயலால கடற்கரையோர மக்கள் உணவு, உடை இல்லாம ரொம்ப கஷ்டப்படறாங்க... அவங்களுக்கு உதவத்தான் நாங்க எல்லார்கிட்டையும் எங்க கல்லூரி சார்பா உதவி கேட்டு, கிடைக்கிற பணத்தை அங்க அனுப்பி வைக்கப்போறோம்..."

கேட்டவர் பதட்டத்துடன்,

"ஓ அப்படியா", என்றார்...

"சரிங்க தாத்தா.. நாங்க கெளம்புறோம்..."

"ஏன் எங்கிட்ட உதவி செய்ய கேக்க மாட்டீங்களா?"

இதனைக்கேட்டவுடன் கல்லூரி நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்று,

"எப்படி தாத்தா.. நாங்க உங்ககிட்ட கேக்கறது. நீங்களே.....", என இழுத்தனர்....

"என்ன நானே பிச்சையெடுத்து சாப்பிடறேனு சொல்றீங்களா..? ஹா ஹா ஹா.... இரு நானும் என்னால முடிஞ்ச உதவி செய்யுறேன்..", என்று சொன்னவர் அருகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெரிய கோணிப்பையை எடுத்து, அதனை மெல்ல அவிழ்த்தார்.....

உள்ளே ஆயிரக்கணக்கான சில்லறை காசுகளும், நூற்றுக்கணக்கான ஐந்து, பத்து ரூபாய் நோட்டுக்களும் இருந்தன...

கண்களில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டாமல் நண்பர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்...

அவர் அதிலிருந்து தேடி ஒரு ரூபாய் நாணயங்கள் ஒவ்வொன்றாய் எடுக்க ஆரம்பித்தார்....

ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து...

என்று எண்ணியவாறே ஐந்து ரூபாயை எடுத்து தனியே வைத்தார்...

""ஐயோ இத கொடுக்கத்தானா இந்த அலப்பரை"" என்று நினைத்தவாறே நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர்....

"இந்த அஞ்சு ரூபாய் எனக்கு மதியானத்துக்கு தேவையான பிரெட்டுக்கு போதும்...

....இந்தாங்க இத அந்த மக்களுக்கு உதவ எடுத்துட்டுப் போங்க..", என்று மீதமிருந்த அனைத்தையும், பல ஆண்டுகளாக வைத்திருந்த அத்தனை பணத்தையும் அப்படியே எங்களுக்கு கொடுத்துவிட்டார்....

அவரின் இந்த மாபெரும் பெருந்தன்மையான செயலைப் பார்த்ததும் நண்பர்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல.. அப்படியே உறைந்து போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்....

அமைதியாக அனைத்தையும் கொடுத்துவிட்டு, சாந்தமாக ஒரு சாமி போல அமர்ந்திருந்தார் ஊனமுற்ற அந்த பிச்சைக்கார தாத்தா....

உதவி என்றால் இது தான் உதவி....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Apr-15, 1:33 pm)
பார்வை : 742

மேலே