டாட்டா காட்டப் போறான்நகைச்சுவை நாடகம் பாகம் 1

கோயமுத்தூரில் "சித்ரா" விமான நிலையப் பகுதியில் வாடகைக்கு வீடு கேட்கிறான் அவினாஷ். வீட்டுச் சொந்தக்காரர் திருப்பதி; அவர் மகள் நதிரா.

அவினாஷ் வீடு பார்க்கிறான்...

அவி : என்னய்யா இவ்வளவு பெரிய அலமாரி?

திருப்பதி : அலமாரியா? கீழே உள்ளது பெட்ரூம்; நடுவுல டைனிங் ஹால்; மேல் கம்பார்ட்மெண்ட் மொட்டை மாடி...சூரிய குளியல் குளிச்சுக்கோ; துணிமணி காய வச்சிக்கோ. வாடகை மூவாயிரம், அட்வான்ஸ் முப்பதாயிரம். கரண்ட் பில், தண்ணிக்காசு தனி. முறை வாசல் நூறு ரூபா. தோட்டக்காரனுக்கு நூறு ரூபா..

அவி : தோட்டமா? எங்கே இருக்கு?

(சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு பையன் சின்ன சிமெண்ட் மேடையில் வைக்கப்பட்டிருந்த போன்சாய் செடிகளுக்கு சிரிஞ்சில் தண்ணீர் ஊற்றுகிறான்..)

ஏன்யா இதுக்குப் பேரு தோட்டமா ? அதுக்கு நான் நூறு ரூபா தரணுமா ?

திருப்பதி :சரி, இருநூறு ரூபாயா கொடுத்துடு; மவனே, நீயில்லாட்டி இன்னொருத்தன்..

அவி : சரி,சரி.. மத்த கன்டிஷன்ஸ் என்ன?

திருப்பதி : கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா ஆறு மாசம் முன்னாடி சொல்லு; காலி பண்றதா இருந்தா மூணு மாசம் முன்னாடி சொல்லு; மாமன் மச்சான் விருந்துக்கு வர்றதா இருந்தா ஒரு மாசம் முன்னாடி சொல்லு...

அவி : மண்டையப் போடுறதா இருந்தா....??

திருப்பதி : அத நாங்களா தெரிஞ்சிக்கிறோம் !

அவி : ஆமா, இவ்வளவு நேரம்தான் லைட்டை போடணும், இவ்வளவு தண்ணிதான் செலவழிக்கணும்னு கன்டிஷன்ஸ் வருமே; அதச் சொல்லலே?

திருப்பதி : வயரிங், பிளம்பிங் எல்லாம் முடிச்சத்துக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்......

அவி : இல்லாத சமாச்சாரத்துக்கு காசா?

திருப்பதி : கவர்ன்மெண்ட் அதைத்தானே பண்ணுது? கவர்ன்மெண்ட் பண்றதை நான் பண்ணக் கூடாதா? நீ என் கிட்ட கேட்டுட்டே; நான் எங்க போயி கேட்க?

சரி, அதை விடு, தம்பி என்ன பண்றாப்பல?

அவி : அரசுப் பள்ளியில பாட்டு வாத்தியார்.....

திருப்பதி : அப்ப என் பொண்ணுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்துடு...என்ன நட்சத்திரம்? என்ன ராசி?

அவி : அது எதுக்கு? நான் வர்ற வழியிலேயே உம்ம பொண்ணை பார்த்துட்டேன்... எனக்குப் பிடிக்கல....

திருப்பதி : ஆசையைப் பாரு; சொந்த வீடு வச்சிருக்கிறவனுக்குத்தான் என் பொண்ணு. தம்பி.. வாழப் போன வீட்டுக் கொடுமைய தாங்கிடலாம்; வாடகை வீட்டுக் கொடுமைய தாங்க முடியாது...

அவி : உங்களைப் பத்தி நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கீங்க. நான் பூர நட்சத்திரம்..சிம்ம ராசி. ஏன் கேட்கறீங்க?

திருப்பதி : அருந்ததி நட்சத்திரத்து காரங்க என்னை ஏமாத்திடுவாங்களாம்; ஒரு ஜோசியக்காரன் சொன்னான்; ஆயிரம் ரூபா செலவழிச்சு பரிகாரமெல்லாம் பண்ணிட்டேன்; எதுக்கும் முன் ஜாக்கிரதையா கேட்டுக்கறேன்...

அவி :என்னது, அருந்ததி நட்சத்திரமா? ஆயிரம் ரூபா செலவழிச்சீங்களா? ஆகா, உங்களை யாருமே ஏமாத்த முடியாது...பை த பை.. அட்வான்ஸை குறைச்சுக்கங்க; நான் அடுத்த வாரம் குடி வர்றேன்...


பத்து நாள் கழித்து...


திருப்பதி : என்ன தம்பி, என் பொண்ணு எப்படி பாட்டு கத்துக்கறா?

அவி : என்னய்யா, சரிகமபதநிய தப்பு தப்பா பாடறா?

திருப்பதி : அப்ப தப்புகமபதநின்னு சொல்லு..அப்பப்ப ஓடிப் போயிடுவா.... பிடிச்சி வச்சி கத்துக் கொடு..

(போகிறார்)

அவி : இந்த ஆள் பொண்ணைப் பத்தி பேசறாரா? பூனைக் குட்டியை பத்தி பேசறாரா?

நதிரா வருகிறாள்....

நதி : ஆசானே, எப்படி எங்க அப்பா கிட்ட மாட்டினீங்க?

அவி : உன் கிட்ட மாட்டலையா? அது போலத்தான்......! என்ன, படிக்கிறியா?

நதி : ப்ளஸ் டூ முடிச்சிட்டேன். மேலே படிக்க ஆசைதான். அப்பா காலேஜூக்கு அனுப்ப மாட்டேங்கிறார்...

அவி : ஏன்?

நதி : முறைப்பையன்க எல்லாம் அவ்வளவுதான் படிச்சிருக்காங்க; அதுக்கு மேல என்னைப் படிக்க வச்சா இந்த பசங்க செட்டாகாதுங்களாம்; வேற மாப்பிள்ளை தேடணுமாம்; இல்ல தெரியாமதான் கேக்கறேன், எனக்குப் படிப்பு வருதா, படிப்புல ஆர்வமிருக்கான்னு பார்த்து என் படிப்பை முடிவு பண்ணணும்... வேற எவனோ ஒருத்தனுக்காக என்னை முடக்கறது எந்த விதத்துல நியாயம்? ப்ளஸ் டூ ரிசல்ட் வரட்டும்.. சுவரேறிக் குதிச்சு ஓடிப் போயாவது படிக்கிறேன்...

அவி : நல்லா இரு... எனக்கும் கல்லூரின்னா பிடிக்கும். குடும்ப சூழ்நிலை. சம்பாதிக்க வேண்டியதா போச்சு. ஆனா தம்பியை படிக்க வச்சிட்டு இருக்கேன். எம்டெக் முடிக்கப் போறான்..

நதி : செலவை எப்படி சமாளிக்கிறீங்க?

அவி : சித்தார்த் லேலாண்டுல கான்ட்ராக்ட் முறையில நைட் டூட்டி பார்க்கிறேன்.

நதி : ஐயையோ, கசக்கி பிழிஞ்சுடுவானே?

அவி : எப்படியோ சமாளிச்சாச்சு. இன்னும் மூணு மாசத்துல கான்ட்ராக்ட் முடிஞ்சுடும். கான்ட்ராக்ட் முடியவும் தம்பி படிப்பு முடியவும் சரியா இருக்கும். தம்பி படிப்பு முடிஞ்சத்துக்கு அப்புறம் லீவு போட்டுட்டு மொத காரியமா ஒரு வாரம் தூங்கப் போறேன்!

நதி : உங்க தம்பி படிச்சு முடிச்சதும் உங்களை விடப் பெரியாளா ஆயிடுவார். படிக்க வச்ச நீங்க அப்படியேதான் இருப்பீங்க. நாலு பேர் எதிர்ல உங்க தம்பி உங்களை அண்ணான்னு கூப்பிடுவாரா? இல்லை, இவரை யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு சொல்லுவாரா?

அவி : ஏம்மா, நீ என்ன வாழ்க்கைல ரொம்ப அடிபட்டிருக்கியா? யார் யாருக்கு எது எது கிடைக்கணுமோ அது கிடைக்காம போகாது. அவனை படிக்க வைக்கிறதால நான் தாழ்ந்து போயிடல. நாலு பேர் எதிர்ல இவன் என் தம்பின்னு சொல்ல என்னால முடியுமே? கடமையைச் செய், பலனை எதிர்பாராதேன்னு கண்ணதாசன் வேற சொல்லியிருக்காரு....

நதி : படிச்சு முடிச்ச கையோட ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து அண்ணா, எனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு; இவ என் கூடப் படிச்சவ.. இவளுக்கும் நல்ல வேலை கிடைச்சிடுச்சு. நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு உங்களுக்கு டாட்டா காட்டப் போறான்..

அவி : நல்ல விஷயம்தானே? இதுல சங்கடப்பட என்ன இருக்கு? அது சரி. உங்க வீட்டுல டூத் பேஸ்ட் இருக்கா?

நதி : இருக்கு.

அவி : உங்க வீட்டு டூத் பேஸ்ட்டுல இட்லியும் காபியும் இருக்கா?

நதி : டிபன் வேணும்னு மறைமுகமா கேட்கிறீங்க... இன்னைக்கு தரேன். ஆனா எப்பவுவே கிடைக்காது....

(போகிறாள்)


தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (19-Apr-15, 11:34 am)
பார்வை : 267

மேலே