நடமாடும் நதிகள்-

மூன்றுவரிக் கவிதை; இரண்டு வரிகளில் ஒரு நிகழ்வை ஒரு முடிச்சுடன் விவரிக்க வேண்டும். மூன்றாவது வரியில் சரேலென ஒரு திருப்பம். படிப்பவரைத் திகைக்க வைக்கும் அந்தத் திருப்பத்தில் முடியவேண்டும் கவிதை. இதுதான் ஹைக்கூ என்கிறார்கள்.
மூன்று மணி நேர சினிமாவை நாவல் எனவும், பத்து நிமிடக் குறும்படத்தை சிறுகதை எனவும் கொண்டால், முப்பது வினாடி விளம்பரம் ஹைக்கூ எனக் கொள்ளலாம்.
==எழுத்தாளர் சுஜாதா.
அவையடக்கம்:

நிரையொன்றாசிரியத்தளை,நேரொன்றாசிரியத்தளை, இயற்சீர்,வெண்சீர் வெண்டளைகள் விரவிவரும் கலிவிருத்தப் பா:

பல்வகைச் சிறப்பும்,நற் பண்பும் கொண்ட
நல்லவர் @நால்வர்தம் நட்பை நோக்கிச்
சொல்வகை தேரிலேன்,பா சொல்லப் போவேன்!
புல்னுனிப் பனிமுத்துப் போலிதைக் கொள்ளுவீரே!
@ நால்வர்:
தொடர் நாயகன் தோழர் திரு.ஜின்னா
முகப்புப் பட வடிவமைப்பாளர் திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பாளர் திரு முரளி T N
முகப்புப் படப் பெயர் பதிப்பாளர் திரு ஆண்டன் பெனி..
அரும்பத விளக்கம்:
சொல்வகை= சொல்லின் வகையும், சொல்லும் வகையும்
புல்னுனிப் பனிமுத்துப் போலிதை=புல்லின் மேலுள்ள பனியான இதனை,
முத்தாக எண்ணி[க்கொள்க]
=====
நடமாடும் நதிகள்

எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)

01.தினசரி நடக்கும்
மகாபாரதம்
பாராளுமன்றம்.!
****
02. எல்லோரும் நினைப்பது
எல்லோரும் வெறுப்பது
சாதி!
****
03. வார்த்தை சிறிது
வாய்ப்போ பெரிது
ஊழல்!
****
04. கேட்டும் பெறலாம்
கேளாதும் வரலாம்
இலஞ்சம்!
****
05. தேர்தலின்முன் இலவசங்கள்
தேர்தலின்பின்
விதிவசங்கள்!
06. வெள்ளம் உயர்த்தியது
மக்களை
மாடிகளுக்கு!
****
07. ஏரியை நாம்மூட
இருப்பிடத்தை நீர்மூட
இயற்கையின் நீதி!
****
08. . ஆண்டவன் கொடுத்த
அட்சய பாத்திரம்
அன்னை!
****
09. ஓடிவர நளினம்
உடல்தழுவக் குளிர்ச்சி
நதிக்குழந்தை!
****
10. கொடிகளில் கனவு!
மடிகளில் மது!
படிகளில் தமிழன்!
====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (13-Mar-16, 12:33 am)
பார்வை : 376

மேலே