அடைவோம் முழுமை
எல்லாப் பொருள்களுக்கும் சில அடிப்படை குணங்கள் உண்டு.. அந்த அடிப்படை குணங்களை துறந்தால் அவை வெறுமை அடைகின்றன.
சூடில்லாத நெருப்பையோ , அலை இல்லாத கடலையோ நினைத்துப் பார்க்க முடியுமா? அவை வெறுமை அடைகின்றன , இல்லையா?
சாதாரணமாக துறப்பதால் அடைவது வெறுமை!
ஆனால் மனிதருக்கே உரித்தான சில அடிப்படை குணங்களை நாம் துறந்தால் , அடைவது வெறுமை அல்ல, முழுமையே !
அடைவோம் முழுமை
வாசம் துறந்தால் மலர்கள் வெறுமை.
சுவாசம் துறந்தால் உடலும் வெறுமை.
நேசம் குறைந்தால் நட்பும் வெறுமை
ஆசை துறந்தால் அடைவோம் முழுமை.
வண்ணம் துறந்தால் ஓவியம் வெறுமை
எண்ணம் துறந்தால் எழுத்துகள் வெறுமை.
ராகம் துறந்தால் பாடல்கள் வெறுமை.
போகம் துறந்தால் அடைவோம் முழுமை.
நீரைத் துறந்தால் மேகம் வெறுமை
வேரைத் துறந்தால் விருட்சம் வெறுமை
ஏரைத் துறந்தால் வயல்வெளி வெறுமை
பாரைத் துறந்தால் அடைவோம் முழுமை.
தகவு துறந்தால் சான்றோர் வெறுமை
மகவு துறந்தால் தாய்மை வெறுமை.
சுகந்தம் துறந்தால் சந்தனம் வெறுமை
அகந்தை துறந்தால் அடைவோம் முழுமை
நீலம் துறந்தால் வானம் வெறுமை
கோலம் துறந்தால் வாசல் வெறுமை
மூலம் துறந்தால் முற்றும் வெறுமை
ஞாலம் துறந்தால் அடைவோம் முழுமை.
கணையைத் துறந்தால் வில்லும் வெறுமை
துணையைத் துறந்தால் வாழ்க்கை வெறுமை
பனையைத் துறந்தால் பாலையும் வெறுமை.
வினைகள் துறந்தால் அடைவோம் முழுமை
சிறகு துறந்தால் புள்ளினம் வெறுமை
கறவை துறந்தால் ஆவினம் வெறுமை.
முறுவல் துறந்தால் முகமும் வெறுமை
பிறவிகள் துறந்தால் அடைவோம் முழுமை.
பச்சை துறந்தால் புல்வெளி வெறுமை
லஜ்ஜை துறந்தால் பெண்மை வெறுமை
நச்சைத் துறந்தால் நாகம் வெறுமை
இச்சை துறந்தால் அடைவோம் முழுமை.
அலைகள் துறந்தால் கடலும் வெறுமை
சிலைகள் துறந்தால் கோயில்கள் வெறுமை
கலைகள் துறந்தபண் பாடுகள் வெறுமை
உலகம் துறந்தால் அடைவோம் முழுமை
உறவு மறந்தால் வாழ்க்கை வெறுமை
கருவைத் துறந்தால் கவிதை வெறுமை
கற்றல் துறந்தால் இளமை வெறுமை
முற்றும் துறந்தால் அடைவோம் முழுமை.