மரணமேமரித்துவிடு

""மரணமே ... மரித்து விடு""

கண்களைக் கட்டி காட்டில் விட்டாற்போல், இப்போது நினைத்தாலும் தாங்க முடியாமல் நெஞ்சம் கிழிந்துப் போயிற்று கவிதாவுக்கு.. என்ன செய்தாலும் மனம் ஆற்றவொணாமல் துடித்துப் போனது.. இதற்கு மேலும் தாங்காது என்ற மனநிலையில் வந்ததால், வழக்கம்போல் தன் வேதனைகளை பகிர்ந்து கொள்ளும் தளமாக அவள் கருதும் முகநூலுக்கு வந்தாள். ஆர்ப்பரிக்கும் மனத்தினை ஆசுவாசப்படுத்த, இதயத்தின் வலிகளை எழுத்துக்கள் வழி இடம்மாற்றி வைத்தாள் இணையத்தின் துணைக்கொண்டு..
விழிகளை
நீ மூடி
அசைவற்று இருப்பதைப்
பார்க்கத்தான்
என்
விழிகளுக்கு
ஒளி கொடுத்தானோ
படைத்தவன்....
என் அனைத்துமே
நீயானாய்..
நீயே இல்லை
என்றானப்பின்
அனைத்துமே
அடங்கிவிட்டதே....
உறவென்று வந்தவன்,
உயிர் தொலைந்துப்
போனதால்....
உறக்கமின்றி தவிக்கின்றேன்......
விரலோடு விரல்
கோர்த்து..
விலகா உறவாய்
உனை
நேசித்திருந்தேனே.....
நெருங்கிய நேரங்கள்
நினைவினிலே.....
நொறுங்கிட்டதே
மனது உன் பிரிவின்
கொடுமையிலே....
தாங்கிட உன் கரங்கள்
அருகினில் இல்லாததால்..
ஏங்கிடும் மனத்தினை
தேற்றிட வழியில்லையே...
எழுதுவதற்கு
ஏதுமில்லாதபோது
ஒரு
மௌனக் கவிதையாய்
என்னை
ஆக்கிரமிப்பு செய்கிறாய்..
மனத்துக்குள்
பதிந்து விட்ட
மௌன உணர்வு
நீ.....
யாருடனும் பகிர்ந்து கொள்ள
இயலவே இயலாத,
என்
இருதயத்துடிப்பும்
நீ...
விதையாக நிதானித்து,
விருட்சமாய் வேரிட்டு,
வீறுநடைப் போட்டு
வீரனாய் மனத்தில் உறைந்தவனே....
விழிகாணா உலகத்திற்கு
ஊர்வலமாய்,
உனை அனுப்பிய நாள் முதலாய்..
துயரக்கடலில் பயணிக்கும்
என் வாழ்க்கை ஓடம்,
பேரலையில் சிக்கிச் சிதறிடுமுன்..
உன்னை பறித்துச் சென்ற காலனிடம்,
என்னையும் இழுத்து வரச்சொல்லிவிடு.....
காத்துக்கிடக்கின்றேன்..
கண்ணீர்த்துளிகளில்
மூழ்கியபடி...

கண்ணீர்த்துளிகளுடன் தம் முகநூலில் இக்கவிதையை பகிர்ந்தாள். மீண்டும் மீண்டும் படிக்கையில், வேதனை அதிகமானதே தவிர.. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இரு கன்னங்களையும் உள்ளங்கைகளில் தாங்கியபடி கணினியின் முகப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் எழுத்துக்களுக்கும் மற்றவர்களின் மனத்தில் நுழையும் சக்தி இருந்திருக்கின்றதோ என்னவோ.. சட் சட்டென்று சில கருத்துக்கள் முகநூல் நண்பர்களிடமிருந்து பதிவாகின.. துயருற்றிருந்த மனத்தில் சிறு துளியாய் மகிழ்ச்சி பரவத் தொடங்கியது. வேகமாக வாசிக்க தொடங்கினாள்.

தோழி கவிதா....தங்கள் கவிதையை விமர்சனம் செய்ய நான் இன்னும் கவிஞனாகவில்லையே! வாழ்த்துகளை மட்டும் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்.
மரணம் தந்த பிரிவு; மரணம் தந்த துன்பம்; மரணம் தந்த ஏக்கம்; அனைத்தும் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதயம் ஏற்குமா? அதனால் அந்த மரணத்தையே இறந்துவிடச் சொல்வது ஏற்புடையது தான்.. மரணம் தானே நேசிப்பவரைப் பிரித்து வருத்துகிறது அதனால் "உன்னைப் பறித்துச் சென்ற காலனிடம் என்னையும் இழுத்து
வரச்சொல்லிவிடு" என்ற வரிகள் வழி கட்டளையிடுவது கனத்த வலியில் வருவன என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. துன்ப வலிகளை இதயத்தில் பதியச் செய்த கவிதை சிறப்பானது.. உங்களுக்குக் கவிதை மிக இயல்பாய் வருகிறது. படித்தவுடன் எளிமையாய் விளங்குகிறது.. பாராட்டுகள். தங்களைப் பாராட்டுவதா தங்கள் விரல்கள் சொன்ன படி வளைந்தோடி உயிரினை வருடிச்சென்ற கவிதையைப் பாராட்டுவதா??? .

முகநூல் தோழியின் மேற்கண்ட பாராட்டு கவிதாவின் மனத்தை சிறிது சாந்தப்படுத்தியது. முகமறியாத தோழியின் ஆறுதல் வார்த்தைகள் தான் இன்னும் தனித்து விடப்படவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியது. மறுபடியும் சில நண்பர்களின் கருத்துக்களைப் படிக்க ஆரம்பித்தாள். ஒரு தொலைதூர நண்பர் இப்படி எழுதியிருந்தார்.

"தாளிலே ஒரு தவமிருப்பது காதல் வசப்பட்டவர்க்கு மட்டுமே சாத்தியம் என்பது சத்தியம்! ஆதலினால் சொல்கிறேன் உன் கவிதை அற்புதம்! உணர்வுகளின் ஊர்வலத்தில்தான் உயிரோட்டமிருக்கும் கவிதையில் என்பது முன்னோர்கள் சொன்ன சொல்தான் அல்லவா? அருகிருந்து ஆதரித்தவன் .. அன்பில்நிதம் தோய்த்தவன்.. கண்மணியாய் கருத்தில் நிறைந்தவன்.. காதலனாய் மனதில் பூத்தவன்.. கண்ட இவ்வுலகப் பிரிவுதனை.. காண வேண்டிய கொடுமை எந்த காதலிக்கும் அபாயகரமானது.. அந்த அதிர்வுகளின் ஆழங்களிலிருந்து மீள்வது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.. அங்கேயும் கைகொடுப்பது கவிதைதான் என்பதற்கு இக்கவிதையும் சாட்சி.. மனதிற்கு மறக்கின்ற சக்தியைக் கொடுக்காமல் இறைவன் படைத்திருந்தால் இந்த பூலோகத்தில் சாவின் விகிதம் பன்மடங்காகியிருக்கும்! கற்பனை கலந்திருக்கிறது என்பது உண்மைதான் ஆனால் அங்கே உன் உள்ளம்பட்ட ரணம் நிதர்சனமாக!!"

கவிதாவின் மனம் அப்படியே கரைந்துத்தான் போயிற்று. தாம் எழுதிய எழுத்துக்கள் மற்றவர்கள் மனத்தில் எப்படி நுழைந்திருக்கின்றன என்று நினைக்கையில் வியப்பாக இருக்கின்றது. மனத்திற்குள் மருகிக்கொண்டிருப்பதை விட வார்த்தைகளில் வலியினைப் பரவிடுவதில் இப்படியும் ஆறுதல் கிடைக்குமா என்று வியந்தாள். இன்னும் தம்மை ஆறுதல் படுத்தவோ அல்லது பதிவாகிய கவிடை அவர்களின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ..? எதுவாக இருப்பினும் அவர்கள் கூறிய விதம் கவிதாவின் மனத்திற்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்திருப்பது நிதர்சனம்.

இன்னொரு நண்பர் இப்படி கவிதை வரிகளாய் கருத்திட்டிருந்தார்.
"பிரியமான பிரிவின் தாக்கத்தை
பிழிந்தெடுத்து வார்த்தைகளாய்
நேர்த்தியாக கோர்த்தெடுத்து
நெஞ்சத்தை சோகமாக்கிவிட்டது."

அதற்கடுத்த நண்பரின் கருத்து;
போகிற போக்கில் எழுதப்பட்ட கவிதையெனத்தெரியவில்லை . காலனின் கல்நெஞ்சத்தால் கரைந்து விட்ட ஒரு ஜீவனை நினைத்து வலி வண்ணத்தில் வரையப்பட்ட வேதனை ஓவியமெனவே படுகிறதெனக்கு. ஆற்றாமைத்துயரை காலம் ஆற்றட்டும்.:

இன்னொரு தோழியின் பதில்மொழி கவிதாவின் மனத்தை, வார்த்தைகளில் விளக்க முடியாத ஒரு நிம்மதியான உணர்வை ஏற்படுத்தியது.
""மரிக்கா மரணம் உண்டென்றால் அது மௌனத்துடன் பயணிக்கும் மனமே...உன் விழியின் வழியே வெளிநடப்பு செய்யும் துளிக்கும் உயிர் வந்தால்.. ஓர் நாளுக்கு ஓராயிரம் முறை மரணிக்கும். உடலின் இறுதி அத்தியாயமே மரணம். மனதிற்கு மரணம் இல்லை. மனம் திறக்கும் நேரம் சஞ்சலம் மறக்கும். மனம் திறந்து வா... சஞ்சலம் மறந்து உரையாடுவோம்...... உன் விழி துடைக்க காத்திருக்கும் மனம் இதோ....""

மேற்கொண்டு படிக்குமுன் கவிதா நீண்டதொரு பெருமூச்சினை எடுத்து விட்டாள். இதயத்தின் ஆழத்தில் இருந்த சொல்லவொணா வேதனை விழிகளில் வழியத் தொடங்கியது. தம் துயரினில் பங்கெடுக்க உருவமாய் அருகில் இல்லாவிட்டாலும், வார்த்தைகளில் என்னமாய் ஆறுதலைத் தூவி விடுகின்றார்கள் முகநூல் நண்பர்கள் என்ற எண்ணம் சிந்தனையில் வியாபித்தது.

தாம் நேசித்தவனின் மரணம், இவர்கள் அறியாத ஒன்று. இருப்பினும் எழுதிய பதிவை வைத்தே இவள் துயருற்றிருக்கின்றாள் என்றுணர்ந்து ( அது கற்பனையாகவே அவர்களுக்கு இருந்திருந்தாலும்) உண்மையாக ஆறுதல் வார்த்தைகளை மென்மையாக தூவி விட்டிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கவிதா மனம் நெகிழ்ந்தாள்.. முகநூல் பலவழிகளில் தீமைகளைக் கொடுக்கின்றது என்று ஆளாளுக்கு வியாக்கியானம் செய்தாலும், தம் வரையில் அது மிகவும் ஆறுதல் தரும் இடமாகவும், இதயத்திற்கு இதத்தை கொடுக்கும் இடமாகவும், அல்லலுற்ற மனத்தை அமைதிப்படுத்தும் தளமாகவும் இருப்பதை உணர்ந்தாள். சிரத்தையெடுத்து பதில்மொழி கொடுத்த அனைத்து நட்புக்களுக்கும் முத்தாய்ப்பாக ஒரு நன்றிப் பதிவை பகிர்ந்தாள் கவிதா.

"இப்பதிவினில் தம் கண்ணீர் அஞ்சலியை பதிவாக்கிய அனைத்து நட்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஏனிந்த சோகம் உமக்கு என்று கேட்டு ஆறுதல் சொல்லும்படி அமைந்துள்ள நட்புகளின் பதிவுகள் ஏதோவொரு ஆறுதலைத் தருகின்றது என்பது உண்மை.
கருத்திட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்."

இதுவரையில் மனத்திலிருந்த ஆழ்ந்த பாரம் சற்றுக் குறைந்தது போல் உணர்ந்தால் கவிதா. கணினியின் முகப்பில் இருந்த கண்ணனின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். "எழுது எழுது என்று நீங்கள் சொல்லும் போதெல்லாம் விளையாட்டாக கிறுக்கி வந்த என்னை, இப்போது நிஜமாகவே உங்களுக்கு கண்ணீர் அஞ்சலி எழுத வைத்துவிட்டீர்களே கண்ணா.. இனி எனக்குத் துணை உங்கள் நினைவும், இந்த எழுத்துக்களும் மட்டுமே கவிக்கண்ணா".. கண்களில் நீர் வடிய, கண்ணனுடன் ஆத்மார்த்தமாக பேசிய உணர்வுடன் கவிதா கணினியை மூடினாள். இனி கணினி அவளின் அந்தரங்கத் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முற்றும்.
*************************************

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (27-Dec-16, 10:56 am)
பார்வை : 258

மேலே