சிவகாசி ------ பாரதி நூல் நிலையம்

சிவகாசி சிவன் கோவில் அருகே உள்ளது பாரதி நூல் நிலையம். அதன் உரிமையாளர்
மீனாட்சி சுந்தரம் இன்முகத்துடன் வரவேற்கிறார். அந்தக் கடை செங்கல்லால்
கட்டப்பட்டதா அல்லது புத்தகங்களால் கட்டப்பட்டதா என்று சந்தேகம்
எழுந்தது. புத்தகங்கள்.... கடையின் எந்தப்பக்கம் திரும்பினாலும்
புத்தகங்கள். ஒரு பக்கம் ஜெயமோகன் புத்தகங்கள், இன்னொரு புறம்
சாண்டில்யன் நாவல்கள், மறுபக்கம் சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகங்கள்.



புத்தகங்களை பார்த்து வியந்த படி இருந்த நம்மிடம் பேச ஆரம்பித்தார் நூலக
உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்.

"அப்பா தோழர் வேலாயுதம். கம்யூனிசம் மேல் அப்பாவுக்கு ஈடுபாடு அதிகம்.
அவர் தான் இன்று பாரதி நூல் நிலையமாக வளர்ந்து நிற்கும் இந்தக் கடையை
நடத்துவதற்கு விதை போட்டவர். 1982 ல் பாரதி நடமாடும் நூல் நிலையம் என்ற
பெயரில் புத்தக கடை ஆரம்பித்தார். புத்தகங்களை சைக்கிளில் வைத்து
புத்தகம் தேவைப்படும் வாசகர்கள் வீட்டில் கொண்டு போய்
படிக்கக்கொடுப்பார். புத்தகங்களை படிக்கக் கொடுக்கும் வாசகர்களிடம் வாடகை
அடிப்படையில் புத்தகத்திற்கு பணம் வசூலிப்பார். இதனால் அப்பாவிடம்
வாசகர்கள் அதிகம் பணம் செலவு ஆவதில்லை என்று புத்தகம் வாங்கிப்
படிப்பார்கள். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை தொகுப்புகள் என ஏராளமான
புத்தகங்கள் உண்டு. மேலும் சோவியத் ரஷ்யா வெளியீடுகள் மற்றும் கம்யூனிச
சித்தாந்த நூல்கள் முதலிய ஏராளமான நூல்கள் அப்பாவிடம் இருந்தன.



சில வருடங்களுக்குப் பின்னர் அப்பா சிவன் கோவில் அருகில் பாரதி நூல்
நிலையம் என்ற பெயரில் தள்ளுவண்டியில் புத்தகங்களை அடுக்கி வைத்து
வாசகர்களுக்கு படிக்கக் கொடுப்பார் .சிவகாசியில் ஏராளமான வாசகர்களை அப்பா
இந்த பாரதி நூல் நிலையத்திற்கு கொண்டுவந்தார்.

காலேஜ் முடித்தபிறகு, நானே நூலகத்தை கவனிக்க முடிவு செய்தேன். தள்ளிவண்டி
கடைல இருந்து நூலகத்தை வேறு இடத்திற்கு முதலில் மாற்றினேன். நிறைய
புத்தகங்கள் புதிதாக வாங்கினேன். பள்ளிப் பாடப்புத்தகங்கள், கையேடுகள்
முதலிய புத்தகங்களை வாங்கி விற்க ஆரம்பிச்சேன். புத்தங்கள் வாடகைக்கு
கொடுப்பதால் ஏராளமான வாசகர்கள் வாங்கிப் படிக்கிறார்கள். ஒரு
புத்தகத்துக்கு ‘அந்தப் புத்தகத்தின் விலைக்கு உரிய முழுப் பணத்தையும்
பெற்றுக் கொள்வோம். அந்தப் புத்தகத்துக்கு முதல் நாள் வாடகையாக 10
சதவீதம் புத்தகத்தின் விலையை அடிப்படையாக கொண்டு பிடித்துக்
கொள்ளப்படும். அதற்கு அடுத்ததடுத்த நாட்களில் ஒரு ரூபாய் மட்டுமே
கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த முறையினால் வாசகர்களும் பயன்
அடைகிறார்கள், நானும் பயன் அடைகிறேன்."

"வாசிப்புப் பழக்கம் இந்தக் கால கட்டத்தில் எப்படி இருக்கிறது என்று
நினைக்கிறீர்கள்"

சிறிது யோசித்து விட்டுத் தொடர்கிறார் ."இன்றும் வாசிப்புப் பழக்கம்
குறையவில்லை. ஏராளமான வாசகர்கள் படிக்கிறார்கள். ஆனால் மிக அளவுடன் தான்
படிக்கிறார்கள். அலுவலக விடுமுறை நாட்களில், சும்மா ரிலாக்ஸ் ஆக
இருக்கும் நாட்களில் எல்லாம் புத்தகத்தை தேடி வருகிறார்கள் .

குறிப்பாக பெண்கள் ஏராளமானோர் படிக்கிறார்கள் .பெண்கள் எல்லாம் சமையல்
குறிப்புகள் தான் படிப்பார்கள். அதைத் தாண்டி எல்லாம் படிக்கத் தெரியாது
என ஒரு சிலர் சொல்வதுண்டு. ஆனால் இங்கு பாரதி நூலகத்தில் ஏராளமான பெண்கள்
அரசியல் நூல்கள், இலக்கியப் புத்தகங்கள் என தேடித் தேடி வாசிக்கின்றனர்.
வாசிப்புப் பழக்கம் அவ்வளவு எளிதாக குறைந்து விடாது."

"எதிர்காலத் திட்டங்கள் என்ன ...?"

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாக்கும் காமிக்ஸ் கதைகள்! #WorldBookDay -
#GoodRead காமிக்ஸ்கள் குழந்தைப் பருவத்தைக் குதூகலமாக்குபவை.
தன்னம்பிக்கையையும், கற்பனைத் திறனையும், புதிய சிந்தனைகளையும்
உருவாக்குவதில் காமிக்ஸ்களுக்கு இணையில்லை. Exciting Comic stories for
kids.
"இங்கு தினசரி 200 க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகிறார்கள். மூன்று
மாதத்திற்கு ஒரு முறையாவது புத்தக கண்காட்சிகள் நடத்த இருக்கிறேன்.
குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில
மொழிகளில் இங்கு இருக்கின்றன, எனவே குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டிய
பெரும்பொறுப்பு இருக்கிறது. இளைஞர்களையும் ஏராளமான புத்தகங்கள் படிக்க
வைக்க அரசியல் நூல்கள், வரலாற்று நூல்கள் என ஏராளமானவை இருக்கின்றன." என
கண்களில் பல கனவுகளுடன் நம்மை பார்க்கிறார் மீனாட்சி சுந்தரம். கனவுகள்
மெய்ப்படட்டும் என்கிற பாரதியாரின் வரிகள் தான் மீனாட்சி சுந்தரத்திடம்
இருந்து விடை பெறும்போது நமக்குத் தோன்றுகிறது.

எழுதியவர் : (17-Aug-17, 5:12 am)
பார்வை : 234

மேலே