என்னைக் கவர்ந்த திரைப்படங்கள் - நாயகன்

தமிழ்நாட்டில் நான் பிறந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் அனைவருமே தங்கள் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களை அதிகமாகக் காணும் வாய்ப்புகளைப் பெற்றிருப்பார்கள். ஆனாலும், எனது தாயார் தீவிரமான மதப்பற்றுடையவராக இருந்ததால் நான் திரைப்படங்கள் காண்பதை அவ்வளவாக அனுமதிப்பதில்லை, இருப்பினும் சிறுவயதில் அண்டை அயலாரது வீட்டில் சென்று பாஷா, படையப்பா என பல படங்களை நான் பார்த்தேன். அந்தப் படங்கள் எதுவும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

என்னைத் தீவிரமாக பாதித்த படம் நாயகன் தான். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனது வீட்டில் தொலைக்காட்சி வாங்கி, ஆன்டெனா பொருத்திவிட்டார்கள். ஆறாம் வகுப்பில் தான் நான் நாயகன் திரைப்படத்தைப் பார்த்தேன். எனது பாட்டி இறந்து விட்டதாக அக்டோபர் இரண்டாம் தேதி நான் காந்தி திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது செய்தி வந்தது. அது ஒரு சனிக்கிழமை. அன்றைக்குக் கிளம்பிச் சென்ற எனது அம்மா, திங்கட்கிழமை தான் திரும்பி வந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை தான் நான் பொதிகை தொலைக்காட்சியில் நாயகன் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தின் காட்சிகளோடு நான் ஒன்றிப்போய் அமர்ந்து விட்டேன். மணிரத்னத்தின் இயக்கத்தில், கமலஹாசனின் நடிப்பில், இளையராஜாவின் இசையில் படம் மிகச்சிறப்பாக உருவாகியிருந்தது.

ஒரு சாதாரண மனிதனை சூழ்நிலைகள் எப்படி மாற்றுகின்றன என்பதை படம் வெளிப்படுத்தியது. தூத்துக்குடியில் துவங்கி பாம்பேயில் நிறுத்தி, வேலு நாயக்கரை தாராவி தமிழர்களின் நாட்டாமையாக மணிரத்னம் தெளிவாகவே சித்தரித்திருந்தார். பிற்காலத்தில் அந்தத் திரைப்படத்தில் வரதராஜ முதலியார் என்பவரது நடை, உடை பாவனைகளைக் கமல் பயன்படுத்தினார் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

பிற்காலத்தில் நான் மரிய புசோவின் காட்பாதர் நாவலைப் படித்த போது, அந்த நாவலில் கூறப்பட்டிருக்கும் சம்பவங்களை எங்கோ பார்த்ததாகத் தோன்றியது, நாயகன் படத்தில் தான் அந்த நிகழ்வுகளைப் பார்த்தேன் என்பதைப் பிற்பாடு தான் உணர்ந்து கொண்டேன்.

எழுதியவர் : (15-Nov-11, 12:22 am)
பார்வை : 634

சிறந்த கட்டுரைகள்

மேலே