எண்ணம்
(Eluthu Ennam)
அன்புள்ள தமிழறிஞர்களுக்கும், கருத்துகளில் தோள் கொடுத்து என்னை உயர்த்திவரும் தளத்தோழமைகளுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதில் பல கோடி, பல கோடி மனம் நிறைந்த சந்தோசம்.
எங்கோ ஒரு மூலையில் களிமண்ணாய் இருந்த என்னை உங்கள் கருத்துகளில் செப்பனிட்டு இந்த கிராமிய களிமண்ணுக்கு உருவம் கொடுத்து உயர்த்தி இருக்கிறீர்கள். இதற்கு வெறும் ”நன்றி"என்ற மூன்றெழுத்து சொல் போதாது. இன்னும் அதற்கு இணையான வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஆரம்பத்தில் நான் எழுதியவைகளையும், இப்போது நான் எழுதுபவைகளையும் பார்க்கிறேன். எனக்குள் பெரும் வித்தியாசத்தை காண்கிறேன்.இதற்கு முழுக்காரணம் பெரியோர்களின் வழிகாட்டலும், மற்ற சகோதர சகோதரிகளின் கருத்து உற்சாகமும்தான். இந்த தளம்தான் எனக்கு எழுத்து அரங்கேற்ற மேடையானது. பார்வையாளர்களாய் நீங்கள்தான் எனக்கு கருத்து எனும் கைதட்டல்கள் கொடுத்து என்னை உயர்த்தி வருகிறீர்கள். நம் தளத்தில் எழுதுவதற்கு போட்டி இருந்தாலும், பொறாமை இல்லை. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அம்மா, அய்யா என்றுதான் எல்லோரையும் அழைக்கத் தோன்றுகிறது. காரணம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தன் மகனுக்கு, தன் சகோதரனுக்கு என்ன உற்சாகம் கொடுப்பார்களோ அதைவிட 100 மடங்கு உற்சாகத்தை தந்து என்னை உயர்த்தி வருகிறீர்கள். அதற்கு உங்களுக்கும்,எனக்கு எழுத மேடை தந்த நம் தளத்துக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.
உங்கள் கருத்துகளில் என்னை செதுக்கி செதுக்கி இப்போது ஓரளவு தேறிவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் சாதாரண கவிதை என்பதே எனக்கு அசாதாராணமாக தெரிந்தது. இப்போது இலக்கணக் கவிதைகளை இனம் கண்டுகொண்டு எழுத முடிகிறது.
கதிரவன் பெருமை-உழவின் மகிமை, உழவனதிகாரம், சுந்தரக்கோதை, தரைமீது கோலமயில், போன்ற வெண்பாக்களையும் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்.
முன்பு திருக்குறளை எடுத்து உழவனதிகாரம் படைத்த நான் இப்போது எனக்குள் புதிய முயற்சியாக இராமாயணத்தை எடுத்துக்கொண்டு “இராமர் நடந்த மருத நிலப்பாதை” எனும் தலைப்பில் 20 வெண்பாக்களை படைக்க முயற்சி செய்திருக்கிறேன். அதன் வெள்ளோட்டமாக ஒரு வெண்பாதான் “இராமரின் பாதை” எனும் பஃறொடை வெண்பா.
இதை கவிதை பகுதியிலும் பதிவிட்டுள்ளேன். இங்கே இதிலிருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி இன்னும் மேம்படுத்த வழிகாட்டுங்கள்.
இதோ அந்த வெண்பாவும் அதற்கான படமும் விளக்கமும்
![](http://eluthu.com/images/data/ennam/medium/f3/30804/ibnta30804.jpg)
"இராமர், சீதாப்பிராட்டி, இலட்சுமணர் ஆகிய மூவரும் , ஒரு நாளுக்கு முன் பெய்த மழைச் சாரலில் துளிர்த்த மலைப் பூக்கள் பாதையாக இருக்கின்ற மலையும் , மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை விட்டு, மருத நிலத்துக்கு புறப்பட ஆரம்பிக்கின்றனர். அப்போது வண்டுகள் துளைத்த மூங்கில்களிலிருந்து வரும் மெல்லிய காற்றோசை குழலோசையாக, திடும் திடும் என ஒலிக்கும் அருவியோசை மத்தள ஓசையாக, சல சல என ஓடும் ஆற்றின் ஓசை ஜலதரங்கம் வாசிக்க அவர்கள் மூவரும் புறப்படுவதற்கு வாழ்த்தொலி வழங்குவதைப் பாருங்கள்"என்ற பொருளில் எழுதியிருக்கிறேன்.
இதில் தாங்கள் காணும் குறை, நிறைகளை கருத்தாக்கி இன்னும் இந்த சொல்லோவியம் அழகு மிளிர வழிகாட்டுங்கள்.