மழைக்குருவி

நீல மலைச்சாரல் - தென்றல்
நெசவு நடத்துமிடம்
ஆல மரக்கிளைமேல் - மேகம்
அடிக்கடி தங்குமிடம்

எந்திர ஓசைகளைக் - கழற்றி
எங்கோ எறிந்துவிட்டு
மந்திரம் போட்டதுபோல் - ஒரு
மெளனம் வசிக்குமிடம்

கட்டடக் காடுவிட்டு - நிழல்
கனிகின்ற காடுவந்தேன்
ஒட்டடை பிடித்தமனம் - உடனே
உட்சுத்தம் ஆகக்கண்டேன்

வானம் குனிவதையும் - மண்ணை
வளைந்து தேடுவதையும்
காணும் பொழுதிலெல்லாம் - ஒரு
ஞானம் வளர்த்திருந்தேன்

வெவ்வேறு காட்சிகளால் - இதயம்
விரிவு செய்திருந்தேன்
ஒவ்வோர் மணித்துளியாய் - என்
உயிரில் வரவுவைத்தேன்

* * * * *
சிட்டுக் குருவியன்று - ஒரு
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் - என்னை
வாவென்றழைத்தது காண்

மொத்தப் பிரபஞ்சமும் - என்
முன்னே அசைவதுபோல்
சித்தப் பிரமைகொண்டு - அந்தச்
சிட்டை ரசித்திருந்தேன்

அலகை அசைத்தபடி - அது
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் - சற்றே
உயரப் பறந்ததுவே

பறக்க மனமிருந்தும் - மனிதன்
பறக்கச் சிறகுமில்லை
இறக்கை துடிக்கையிலே - என்
இமைகள் துடிக்கவில்லை

சொந்தச் சிறகுகளில் - வானைச்
சுருட்டி எடுத்துக் கொள்ளும்
இந்தக் குருவியினும் - மனிதன்
எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?

கீச்சுச் கீச்சென்றது - என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே - என்மேல்
பிரியமா என்றது

* * * * *

அறிவுக்கு விரிவுசெய்ய - மனிதர்
ஆயிரம் மொழிகாண்பினும்
குருவிக்கு விடையிறுக்க - ஒரு
குறுமொழி கண்டதுண்டா?

ஒற்றைச் சிறுகுருவி - நடத்தும்
ஓரங்க நாடகத்திலே
சற்றே திளைத்திருந்தேன் - காடு
சட்டென்று இருண்டதுகாண்

மேகம் படைதிரட்டி - வானை
மிரட்டிப் பிடித்ததுகாண்
வேகச் சுழற்காற்று - என்னை
விரட்டியடித்துது காண்

சிட்டுச் சிறுகுருவி - பறந்த
திசையும் தெரியவில்லை
விட்டுப் பிரிந்துவிட்டேன் - விரைந்து
வீட்டுக்கு வந்துவிட்டேன்

* * * * *
வானம் தாழ்திறந்து - இந்த
மண்ணில் வீழ்ந்ததென்ன
காணும் திசைகளெல்லாம் - மழையில்
கரைந்து போனதென்ன

மின்னல் பறிக்குதென்று - சாரல்
வீட்டில் தெறிக்குதென்று
ஜன்னல் அடைத்துவைத்தாள் - மனைவி
தலையும் துவட்டிவிட்டாள்

அந்தச் சிறுகுருவி - இப்போ(து)
அலைந்து துயர்ப்படுமோ?
இந்த மழைசுமந்து - அதன்
இறக்கை வலித்திடுமோ?

* * * * *

காட்டு மழைக்குருவி - போர்த்தக்
கம்பளி ஏதுமில்லை
ஓட்டை வான்மறைக்க - அதன்
உயரே கூரையில்லை

கூடோ சிறுபுதரோ - இலைக்
குடைக்கீழ் ஒதுங்கிடுமோ?
தேடோ தேடென்று - இடம்
தேடி அலைந்திடுமோ?

பெய்யோ பெய்யென்று - மழை
பெய்தால் என்ன செய்யும்
அய்யோ பாவமென்று - குருவி
அழுவதை நினைத்திருந்தேன்

* * * * *
காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த
கதையே வேறுவிதம்
கூட்டை மறந்துவிட்டுக் - குருவி
கும்மியடித்ததுகாண்

வானப் பெருவெளியில் - கொட்டும்
மழையில் குளித்ததுகாண்
கானக் கனவுகளில் - அது
கலந்து களித்ததுகாண்

சொட்டும் மழைசிந்தும் - அந்தச்
சுகத்தில் நனையாமல்
எட்டிப் போனவனை - அது
எண்ணி அழுதது காண்


கவிஞர் : வைரமுத்து(26-Oct-12, 3:43 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே