சடகோபர் அந்தாதி - நூல் பாகம் 1
வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணம்கடந்த
போதக்க டல்எங்கள் தென்குரு கூர்ப் புனிதன் கவிஓர்
பாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1
சுடர்இரண் டேபண்டு மூன்றா யினதுகள் தீர்ந்துலகத்து
இடர்இரண் டாய்வரும் பேர்இருள் சீப்பன எம்பிறப்பை
அடர்இரண் டாம்மலர்த் தாள்உடை யான்குரு கைக்கரசன்
படர்இருங் கீர்த்திப் பிரான்திரு வாய்மொழிப் பாவொடுமே. 2
பாவொடுக் கும்நுன் இசைஒடுக் கும்பலவும் பறையும்
நாவொடுக் கும்நல் அறிவொடுக் கும்மற்றும் நாட்டப்பட்ட
தேவொடுக் கும்பர வாதச் செருஒடுக் கும்குருகூர்ப்
பூவொடுக் கும்அமு தத்திரு வாயிரம் போந்தனவே. 3
தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தருமநிறை
கனமாம் சிலர்க்குஅதற் குஆரண மாஞ்சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்குஅதற்கு எல்லையு மாம்தொல்லை ஏர்வகுள
வனமாலை எம்பெரு மான்குரு கூர்மன்னன் வாய்மொழியே. 4
மொழிபல ஆயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும்
வழிபல வாயவிட் டொன்றா அதுவழு வாநரகக்
குழிபல ஆயின பாழ்பட் டதுகுளிர் நீர்ப்பொருநை
சுழிபல வாய் ஒழுகுங்குரு கூர் எந்தை தோன்றலினே. 5
தோன்றா உபநிட தப்பொருள் தோன்றலுற் றார்தமக்கும்
சான்றாம் இவைஎன் றபோதுமற் றென்பலகா லும்தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத் தின்மும் மைத்தமிழை
ஈன்றான் குருகைப் பிரான்எம் பிரான்தன் இசைக்கவியே. 6
கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்சட கோபன்கு மரிகொண்கன்
புவிப்பா வலர்தம் பிரான்திரு வாய்மொழி பூசுரர்தம்
செவிப்பால் நுழைந்துபுக் குள்ளத் துளேநின்று தித்திக்குமே. 7
தித்திக்கும் மூலத் தெளியமு தேயுண்டு தெய்வமென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம்பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய்குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான்சொன்ன ஆயிரமே. 8