தமிழியக்கம் - புலவர் (1)

தமிழ்ப்புலவர் ஒன்றுபடும்
நன்னாளே தமிழர்க்குப்
பொன்னா ளாகும்.

தமிழ்ப் பெருநூல் ஒன்றேனும்
ஒற்றுமையைத் தடைசெய்யக்
கண்ட துண்டோ?

தமிழ்ப் புலவர் தமக்குள்ளே
மாறுபட்ட தன்மையினால்
இந்நாள் மட்டும்

தமிழ்ப் பெருநா டடைந்துள்ள
தீமையினைத் தமிழறிஞர்
அறிகி லாரோ?

ஒல்காத பெரும் புகழ்த் தொல்
காப்பியமும், நன்னூலும்
தமிழர்க் கெல்லாம்

நல்கரிய நன்மை யெலாம்
நல்கின என் றால்நாமும்
நன்றி சொல்வோம்

செல்பலநூற் றாண்டுசெல
அவ்விருநூல் திருவடியில்
புதிய நூற்கள்

பல்காவேல் இருநூற்கும்
பழியே! நம் புலவர்க்கும்
பழியே யன்றோ?

தனித்தியங்கத் தக்கதெனத்
தமிழ்ப்பற்றித் தமிழ்ப்புலவர்
சாற்றுகின்றார்

இனித்திடும் அவ் விருநூலில்
வடமொழி ஏன்? வட எழுத்துக்
கொழுங்கு தான் ஏன்?

தனித் தமிழில் இந்நாட்டுத்
தக்கபுதுக் காப்பியம், நன்
னூல், இயற்ற

நினைப்பாரேல் நம்புலவர்
நில வாவோ ஆயிர நூல்
தமிழகத்தே.

முதுமைபெறு சமயமெனும்
களர் நிலத்தில் நட்டதமிழ்ப்
பெருநூல் எல்லாம்

இதுவரைக்கும் என்ன பயன்.
தந்ததென எண்ணுகையில்
நான்கு கோடிப்

பொதுவான தமிழரிலே
பொன்னான தமிழ் வெறுத்தார்
பெரும்பா லோராம்!

புதுநூற்கள் புதுக் கருத்தால்
பொது வகையால் தரவேண்டும்
புலவ ரெல்லாம்.

சோற்றுக் கென் றொருபுலவர்
தமிழ் எதிர்ப்பார் அடி வீழ்வார்!
தொகையாம் செல்வப்

பேற்றுக் கென் றொருபுலவர்
சாஸ்திரமும் தமிழ் என்றே
பேசி நிற்பார்!

நேற்றுச்சென் றார்நெறியே
நாம் செல்வோம் என ஒருவர்
நிகழ்த்தா நிற்பார்

காற்றிற்போம் பதராகக்
காட்சியளிக் கின்றார்கள்
புலவர் சில்லோர்!


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 7:01 pm)
பார்வை : 54


மேலே