கைம்மைத் துயர்

பெண்கள்துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ!
கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீ ரோ! (பெண்)

பெண்கொடி தன்துணையிழந்தால்
பின்பு துணை கொள்வதிலே
மண்ணில் உமக் காவதென்ன வாழ்வறிந்தோரே?
வாழ்வறிந்தோரே! மங்கை மாரை ஈன்றோரே! (பெண்)

மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
மங்கைநல்லாள் என்ன செய்வாள்? அவளை நீங்கள்
ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
அணுவளவும் அடையாமல் சாகச் செய்தீர்!

பெண்டிழந்த குமரன் மனம்
பெண்டு கொள்ளச செய்யும் எத்தனம்
கண்டிருந்தும் கைப்பெண் என்ற கதை சொல்லலாமோ? )
கதை சொல்லலாமோ? பெண்கள் வதை கொள்ளலாமோ? (பெண்)

துணையிழந்த பெண்கட்குக் காதல் பொய்யோ?
சுகம்வேண்டா திருப்பதுண்டோ அவர்கள் உள்ளம்?
அணையாத காதலனை அணைக்கச் சொன்னீர்
அணைகடந்தால் உங்கள்தடை எந்த மூலை?

பெண்ணுக்கொரு நீதி கண்டீர்
பேதமெனும் மதுவை யுண்டீர்
கண்ணிலொன்றைப் பழுதுசெய்தால் கான்றுமிழாதோ?
கான்றுமி ழாதோ புவி தான் பழியாதோ? (பெண்)


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 4:52 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே