தட்டாமாலை - பாலியல் அரசியல் கவிதை
என் உடலை ஒவ்வொருமுறையும் காலியாக்குகிறேன்
மதுவின் சேகரத்தில் சுழலத் தொடங்கும் போதெல்லாம்
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
உடலுக்குள் மீண்டும் மதுவின் சுரப்பு அமிழ்தத்தின் வேலை
நாளங்களில் அதன் பாய்ச்சல்
வேட்கையுடன் உன்னைத் தேடி
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
நீ மதுவைப் பருக மட்டுமே இயன்றவன்
தட்டாமாலை சுழலும் உடலில் கைகோர்க்கத்
தயங்கியவனிடம்
மது வேலை செய்வதில்லை வெறும் கண்ணீரைப் போன்றதே
அமிழ்தச் சுவையுடையது பெண்ணின் மதுவும்
கைகோர்த்துக் கொள் மதுவின் வெப்பம் உன்னிலும் பரவி
நீயும் சுழலுவாய்
மெல்ல நீயும் நானும் தரையிலிருந்து உயருவோம்
உறுப்புகள் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள
அனுமதிப்போம்
மதுவின் ஊற்று அடர்ந்து வேகமாய்ச் சுரக்கும் கணத்தில்
நீ பருகும் வேகமும் உன் பவளவாய்ச் சிவப்பும்
கொள்ளை கொள்ளும் காட்சியாகும்
நீ மது தேடி வீதிகளில் அலையும்
ஒரு மகா குடிகாரன்
தாடைகளில் வளர்ந்த புல்வெளியிலும்
மார்புகளில் மண்டிய புதர்களிலும்
தேடி அலைந்து கிடைக்காமல் போனதன்
சோகங்கள் பூத்துக் கிடந்து சருகாகும்
நூலாம்படை படரும்
மதுவைக் குடிக்க அலைபவன் நீ
மது சுரக்கும் உடல் அற்றவன் நீ
மதுக் குடுவைகளும் பானைகளும் தாழிகளும்
தேடித் தேடி ஒவ்வொரு உடலாய்த் தேடி
தோற்றுப் போவாய் நீ
அதற்கு ஒரு யோனி செய்யவேண்டும்
அதுவே மதுக்குடுவை மதுவின் தாழி
மதுவின் கடல்