ஊசிகள்

எண்ணிக்கையற்ற முறைகள்
வன்கலவிக்கு உள்ளான மென்னுடலை
ஊசிகள் பொதியப்பட்டது என்றாள் நீலவேணி
ஒவ்வொரு கலவியும் ஊசியாகி
எலும்புக்குள்ளும் சதைகளுக்குள்ளும்
சென்று செருகிக் கொள்ளும் வரை அறியமுடியும்
பல்கடித்துத் தாங்கிக் கொண்டால்
வயிற்றில் தண்ணீர் சென்றிறங்கும் வழியை
உணர முடிவது போலவே
ஒரே நூலால் கோர்க்கப்பட்டவை போல
ஓர் ஒழுங்குக்குள் பொருந்தி உடலுக்குள்
சேகரமாவதை எண்ணிக்கொண்டே இருந்தாளாம்
உள் சென்றவை வெளிமீளும் வழியறியாததைப் போல
இரத்தத்தின் நதியில் போயிறங்கி
வேர்கொண்டன அவள் உடலெங்கும்
ஊசிகள் ஊன்நுழையும் சிறுயோனி துவாரத்தை
அதே ஊசிகளால் தைத்து அடைக்க இயன்ற போது
ஊசிகளின் எண்ணிக்கை இத்துடன் முற்றும் என்றாள்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:08 pm)
பார்வை : 0


மேலே