தமிழ்த்தொண்டு
இயற்கை அன்னை அருளிய இன் தமிழ்!
அயல்மொழி வேண்டா ஆர் எழில் சேர் தமிழ்
நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும்
குறைவில தென்றுகுறிக்கும் தனித்தமிழ்!
தமிழர் வாழ்வின் தனிப்பெருமைக்கும்
அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ்!
அந்த நாளில் அறிவுசால் புலவர்
எந்நாள் தோன்றியதோ எனும் பழந்தமிழ்!
தமிழ்நாடு பலப்பல தடுப்பரும் இன்னலில்
அமைந்தும், அணுவும் அசையாப் பெருந்தமிழ்
தமிழை அழித்தல் தமிழரை அழிப்பதென்று --
இமையாது முயன்ற அயலவர் எதிரில்,
இறவாது நிற்கும் ஏற்றத் தமிழன்
பெருநிலை எண்ணுக தமிழ்ப்பெரு மக்களே!
அருஞ் செல்வர்கள் அன்று தொடங்கி
இன்று வரைக்கும் ஈந்து வந்துள்ள
பொன்றா ஆதரவு -- அன்றோ காரணம்?
அயல்மொழி எல்லாம் அண்டையில், கண்ணெதிர்
வியக்கு முறையில் மேன்மை பெற்றன;
என்ன முயற்சி! எத்தனை ஆர்வம்!
இன்ன வண்ணம் இருக்கையில், நம்மவர்
தமிழிடம் காட்டும் தயவு போதுமா?
தமிழ்த்தாய் பூசை போதுமா? சாற்றுக!
"தமிழர் பொருளெல்லாம் தமிழுக்குத் தந்தார
"தமிழை யுயர்த்தினர் தாமுயர் வுற்றார
என்ற சொல் நாட்டினால், இறவா நற்புகழ்
நன்று வாய்ந்திடும் என்ற நடுக்கமோ?
தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு --
அமிழ்தம் அன்றோ அண்ணன்மாரே?
ஆவன தமிழுக்கு ஆற்றுதல் சிறிதே
ஈவது சிறிதே இன்ப மொழிக்கு!
வருத்தச் சேதி இஃதொன்று மட்டுமா?
ஒருவர் ஒன்று தமிழ் நலம் உன்னி
இயற்ற முன் வந்திடில், இடையூறு பற்பல
இயற்ற முன்வருவதை என்ன என்பது!
சேர்ந்து தொண்டாற்றுதல் சிறப்பா? அன்றிக்
காய்ந்தும், முணுத்துக் கசந்தும் கலகம்
செய்தும் திரிதல் சிறப்பா? செப்புக!
குள்ள நெஞ்சினர் கொடுமை செய்வதைத்
தெள்ளிய நெஞ்சினர் தீர்த்தும், தமிழில்
அன்பிலாத் தமிழரை அன்பில் தோய்த்தும்,
தென்பா லெழுந்த தீந்தமிழ்ச் சுடரை வானிடை எழுமோர் வண்ணச் சுடராய்ச்
செய்யுமுன் வருக தமிழரே,
உய்ய நம்மவர்க்கிங்கு உறுதுணை அஃதே!