தை மகளே வருக! (பொங்கல் கவிதைப் போட்டி)
கசப்பாகிப் போன எங்கள்
வாழ்க்கைப் பருக்கைகளில்
இனிப்புச் சுவை கூட்ட
வெல்லத் தை மகளே வருக!
எமை குத்திக் கிழிக்கின்ற
துன்பக் காளையதை
அடக்கி ஒடுக்குதற்கு
வீரத் தை மகளே வருக!
அவநம்பிக்கை இருட்டில்
மூழ்கி கிடக்கும் உள்ளத்தில்
நம்பிக்கை ஒளிபாய்ச்ச
சூரியத் தை மகளே வருக!
ஏர்பிடித்தோர் இதயமெல்லாம்
ஏமாற்ற ரணங்கள் இங்கே
ஆறுதலாய் மருந்திடவே
மஞ்சள் தை மகளே வருக!
வாழ்க்கை வயல் முழுதும்
முளைத்த கவலை ' களை '
பிடுங்கி போடுதற்கு
கன்னித் தை மகளே வருக!
தை பிறந்தால் வழி பிறக்கும்
எங்கள் வாழ்வும் சிறக்குமென்ற
நம்பிக்கையை உயிர்ப்பிக்க
நந்தனத் தை மகளே வருக!

