உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே…(பொங்கல் கவிதைப் போட்டி)

தீவிர சிகிச்சைப்பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது உழவு

சுயம் இழந்து கொண்டிருக்கும்
விளைநிலங்களால் புற்றுநோய்

வீரியம் குறைந்து கொண்டிருக்கும்
விதைகளால் பக்கவாதம்

மின்சார உயிரற்று பிணமாய் நிற்கும்
குழாய் கிணறுகளால் இருதயக்கோளாறு

மழை பொய்த்ததாலோ
மாநில அரசியலாலோ
வரண்டுகிடக்கும்
பாசன வாய்க்கால்களால் சிறுநீரக கோளாறு.

விலைபோகாத
விளை பொருட்களால் மூளைக்காய்ச்சல். . .

தீவிர சிகிச்சைப்பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது உழவு

சமீபகாலமாக -
எதிர்பார்ப்புகளை விதைத்து
ஏமாற்றங்களை
அறுவடை செய்துகொண்டிருக்கும்
உழவர்கள்
அவர்களுக்கான
சவப்பெட்டியை செய்துகொண்டிருக்கிறார்கள்.

எழுதியவர் : புதுவைப் பிரபா (8-Jan-13, 6:23 am)
பார்வை : 187

மேலே