அகற்றுவோம் அகதிகள் முகாமை

வாழ்ந்திட இயலாநிலை பிறந்த மண்ணில்
வாழ்ந்தே தீரவேண்டிய வயதின் நிலை !
இழைத்திட்ட கொடுமை தாங்கா தமிழர்கள்
பிழைத்து வந்தனர் இங்கே பிழைத்து வாழ !

தொன்றுதொட்டு பேசிடும் தொப்புள்கொடி உறவு
குருதியில் கொண்டதால் தாய்வீடாம் தமிழ்நாட்டை
அடைந்திடும் தமிழர்கள் அகதிகளாய் இங்கே
அந்நிய மக்களாய் முகாம்களில் முடங்கியுள்ளனர் !

விடுதலைப் போரில் மடிந்திட்ட போராளிகள் போக
சுற்றியிருந்த சுற்றங்களும் உற்றங்களும் மறைந்து
மீதியுள்ளவரோ ஈழத்தில் கைதிகளாய் முகாம்களில்
தஞ்சம்தேடி வந்தவரோ அகதிகளாய் தமிழகத்தில் !

நாடிவந்த உடன்பிறவா தமிழ் உடன்பிறப்புக்களை
வேலியில் அடைத்து வேடிக்கைப் பார்க்காமல்
முகாமில் வைத்து மூன்றாந்திர குடிமக்களாய்
நடத்துவது நாம் செய்திடும் துரோகமன்றோ !

வாய்மொழி ஆணைகள் பொய்யாகமல் இருந்திட
வாழ்ந்திட வந்தோரை வரவேற்று நாமும்
வழிவகை வகுத்து நம்மில் ஒருவராய் மாற்றிட
முகாம்களை அகற்றி முகமலரச் செய்திடுவோம் !

புனிதராக முடியாவிடின் மனிதராக இருப்போம்
முகாமின் முகம்கிழித்து முகவரியாய் மாற்றிடுவோம் !
நம்பி வந்தவர்களின் நெஞ்சில் என்றும்
நம்பிக்கை ஒளியாய் இருந்திடுவோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Jan-13, 7:56 am)
பார்வை : 87

மேலே