தைமகளே வருக. (பொங்கல் கவிதை போட்டி)

பேறு கால மார்கழி முடிய
பிரசவிப்பாய் தைமகளே
ஏர் உழவன் வாழ்வினிலே
ஏற்றத்தை வை மகளே.
கண் தேய அழுதுகொண்டே
கவலைகளில் மிதந்துகொண்டே
மண் கலப்பை பிடிப்பவனின்
மனம் மகிழ வா மகளே.
கஞ்சி தொட்டியிலே
கெஞ்சி உணவு வாங்கி உண்ணும்
கந்தல் மனிதன் அவன்
வாழ்வு மாற வா மகளே.
ஆசை அரசியலில்
ஆடாய் வேசமிடும்
ஓநாய் மனிதர்களை
ஒழித்துவிட வா மகளே.
காவி உடையில் ஒழிந்து
நாவில் குருதி சுவைக்கும்
காமச் சாமியாரை
களையெடுக்க வா மகளே
ஊழல் கிளையறுத்து
உண்மை நிலைநிறுத்தி
சேரில் தாமரையாய்
சிரித்து வா நீ தை மகளே.