மரணித்தும் வாழ்வாய் நீ..!

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
பலரை நரகத்தில் தள்ளியபடி
உனக்கான
சொர்க்கத்தின் கதவு திறந்திருக்கிறது
அவ்வளவுதான்!
நீ ஒரு பூ
ஒரு தோளில்
மாலையாகும் கனவுகளோடு
மலர்ந்தாய்
ஆனால்;பிச்சை பாத்திரத்தில்
வளர்ந்த செடியில் பூத்ததால்
உன்னை அணுகி ஆராய
யாருமற்று அனாதரவாக
கல்லறைக்கு
கரைசேர்த்து விட்டார்கள்
நீயொரு பறவை
கடல்கள் தாண்டி
கரை சேர நினைத்தாய்
சிரசு துண்டித்து
காலம் மூர்க்கத்தனமாய் உன்னை
மூழ்கடித்து விட்டது
இருந்தும் நீ..
உலகத்து இளைஞர்களுக்கு
உனது
வாழ்க்கையை மொழிபெயர்த்து
ஒரு செய்தியை
வழிமொழிந்து விட்டு போயிருக்கிறாய்
குற்றவாளிகளை
அடையாளப்படுத்திய உன்னை
சிறையில் தள்ளி
சிதைத்ததுதான் இதில்
வருத்தத்திற்குரிய
வரலாறு
இருந்தும்;
வாழும் இளைஞிகளின்
எதிர்பார்ப்பின் பக்கங்களில்
நீ எழுந்து நிற்பாய்
சொர்கத்தை சுகித்த சுவை கொணர்ந்து.
உனக்காக பிரார்த்திக்கிறேன்
ஒரு தந்தையாய்,ஒரு சகோதரனாய்,
ஒரு மகனாய்!
2013-01-09.சவூதியில் மரண தண்டனைக்குள்ளான
றிஸானா நபீக் நினைவாக!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.